செய்திகள்

காணிகள் விடுவிக்கப்பட்டபோதும் மக்கள் செல்லும்போது இரரணுவம் தடுத்து வருகிறது : செல்வராசா எம் பி கண்டனம்

காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் செலும்போது இராணுவத்தினர் தடுக்கும் நிலைமையே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கண்டனம் தெரிவித்துளார்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4.00மணியளவில் மட்டக்களப்பு,வவுணதீவு,விளாவட்டவானில் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கல்முனை,நற்பிட்டிமுனையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் சுற்றிவளைப்பின்போது 23 இளைஞர்கள் அக்கரைப்பற்று தம்பட்டையில் உள்ள மயானத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்த நினைவு தினத்தினை அனுஸ்டிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் நற்பிட்டிமுனை மக்கள் இருந்துவந்தனர்.தனது பிள்ளைகளுக்கு நினைவு தினத்தினைக்கூட செய்யமுடியாத நிலையில் பெற்றோர் இருந்தனர்.

ஆனால் 30வருடங்களுக்கு பின்னர் அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.அந்த நிகழ்வு எந்தவித அச்சுறுத்தலும் இன்றி சிறப்பாக நடைபெற்றது.அதேபோன்று கல்முனையிலும் சிறப்பாக நடாத்தப்பட்டது.அங்கும் எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

அரசாங்கம் உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்.அதில் எந்த தவறும் இல்லையென்று கூறிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் இந்த விளாவட்டவானில் நடைபெற்ற நிகழ்வில் மட்டும் படையினர்,பொலிஸார் அச்சுறுத்தியதும்,கூட்டத்திற்கு மக்களை கலந்துகொள்ளக்கூடாது என அச்சுறுத்தியதும் கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.இது உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சில சிப்பாய்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கையாகும்.

இது இங்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கின் அனைத்துப்பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றது.அண்மையில் இராணுவம் வசம் இருந்த ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.அந்த காணிகளை சொந்தக்காரர்கள் பார்வையிடச்சென்றபோது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டனர்.அரசாங்கம் அனுமதியளித்தாலும் அதற்கு இராணுவம் அனுமதியளிக்காத நிலையே இருந்துவருவதை நாங்கள் காண்கின்றோம்.

எனவே தொடர்ச்சியாக தமிழர்கள் போராடவேண்டிய நிலையிலேயே இருப்பதா என்பதை இங்கு கேட்கவேண்டியுள்ளது. இந்த நிலை தொடருமானால் மக்கள் கிளர்ந்தெழும் நிலை இந்த நாட்டில் ஏற்படும்.இந்த நாட்டில் இருந்த அராஜக ஆட்சிக்கு எதிராக சிறுபான்மை சமூகம் ஒன்று சேர்ந்து வாக்களித்தோம்.புதிய ஆட்சி முறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

சிறுபான்மை சமூகம் இந்த புதிய ஆட்சிமுறையின் கீழ் ஏதாவது நன்மை கிட்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.ஆனால் ஜனாதிபதியை தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படாமல்செய்வதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றதுடன் ஜனாதிபதிக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள கூட்டுத்தன்மையினையும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாங்கள் காண்கின்றோம்.இதனை ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு செய்யும் சூழ்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும்.

கடந்த பத்துவருடமாக இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்கவில்லை.சட்ட அமுலாக்கம் இல்லாத ஒரு நாட்டிலே நல்லாட்சியை நாங்கள் காணமுடியாது.அதன் காரணமாகவே அன்றைய ஆட்சியை சிறுபான்மை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

தமிழ் மக்கள் பல இழப்புக்களை சந்தித்த இனம்.முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பல இழப்புகளை எதிர்கொண்ட இனம்.வடக்கு கிழக்கில் காணாமல்போன இளைஞர்களை இன்னும் பெற்றோர் மனைவிமார்கள் தேடி அலையும் நிலையே உள்ளது. காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விளக்கங்களை மட்டுமே கோரிநிற்கின்றதே தவிர எவரையும் கண்டுபிடிக்கும் பணியை செய்யவில்லை.

ஆணைக்குழுவின் விசாரணையின்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பல குற்றவாளிகள் இனம் காணப்பட்டனர்.ஆனால் அவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.இது தமிழ் மக்களை விரக்தியடையச்செய்துள்ளது.இந்த புதிய ஆட்சியிலாவது இதற்கு ஒரு முடிவுகிடைக்காவிட்டால் இந்த ஆட்சியிலும் சில கவலைக்குரிய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மேற்கொள்ளலாம்.

இந்த புதிய அரசாங்கம் நல்ல ஆட்சியை ஏற்படுத்தினாலும் கூட அந்த அரசாங்கம் விரும்புளவுக்கு சில விடயங்களை அமுலாக்கம் செய்யமுடியாத நிலைமை உள்ளதை நாங்கள் காண்கின்றோம்.புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பலம் இல்லாத நிலை உள்ளது.பெரும்பான்மை அற்ற இந்த அரசாங்கத்தினால் எமது பிரச்சினையை தீர்த்துவிடமுடியுமா என்ற கேள்வியுள்ளது.

65வருடமாக போராடி தமது அபிலாசைகளை தீர்த்துக்கொள்ளமுடியாத தமிழினம் இன்றுவரையில் போராடிக்கொண்டுதான் வருகின்றது.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்புரிமையை அதிகரிப்பதன் மூலமே புதிய அரச தலைவருடன் இணைந்து ஒரு பெறுமதியான இனப்பிரச்சினை தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.