செய்திகள்

காணி, கைதிகள் விவகாரத்துக்கு 2 வாரத்தில் பதில்: கூட்டமைப்பிடம் ரணில் உறுதி;

வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, யாழ் மாவட்டத்தினுடைய நீர்மாசடைதல் போன்ற விவகாரங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தங்களுடைய நிலைப்பாட்டினை வெளியிடுவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பிலேயே பிரதமர் மேற்படி உறுதிமொழியை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இந்தச்சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சென்றிருந்த கூட்டமைப்பின் தூதுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அரசின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் நிபுணர் குழுவொன்றும் கலந்து கொண்டிருந்தது.

இச்சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்;

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் மூன்று முக்கியமான விடயங்கள் பற்றி கலந்தாலோசித்திருந்தோம். அதில் சம்பூர் மக்களுடைய காணிகளில் 800 ஏக்கர் நிலத்தினை முதலீட்டு ஊக்குவிப்பு சபை கையகப்படுத்தியிருப்பதுடன், 200 ஏக்கர் நிலத்தினை கடற்பனையினர் தங்களுடைய தேவைகளுக்காக கையகப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் வலிகாமம் வடக்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

இவை உடனடியாக விடுவிக்கப்பட்டு அங்கு அப்பிரதேச மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று அரச தரப்பிடம் நாம் வலியுறுத்தினோம். அதற்கு பிரதமர் சம்பூர் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதேபோல் வலிகாமம் பிரதேசத்தின் பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவக் குறைப்பு தொடர்பாகவும் ஆராய்வதற்கு வடக்கிற்கு தற்போது பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன சென்றுள்ளார்.

அவர்  பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து அங்குள்ள தற்போதைய உண்மை நிலைவரங்களையும் ஆராய்ந்து கொழும்பு வந்ததன் பின் அறிக்கையொன்றினை வெளியிடுவார். அதன் பிரகாரம் உரிய தீர்வினை பெற்றுத் தருவேன் என பிரதமர் உறுதியளித்தார்.

இவ்வறிக்கை வெளிவந்த கையோடு அதனை சரிவர ஆராய்ந்து காலம் கடத்தாது உடனடியாக இவ்விரு பிரதேச மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என நாம் வலியுறுத்திய அதேவேளை கடந்தகால அனுபவங்களையும் சுட்டிக்காட்டி இவ்விடயம் அறிக்கையோடு நின்றுவிடாது உடனடியான செயலில் இறங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

மேலும், யாழ் குடாநாட்டினை அச்சுறுத்தும் நீர் மாசடைதல் தொடர்பிலும்யாழ் மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். இதனை ஆராய்வதற்கு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படுமெனவும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எமக்கு உறுதியளிக்கப்பட்டது.

அத்துடன், நீண்டகாலமாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் இப்பேச்சு வார்த்தையில் பேசியிருந்தோம். இக்கைதிகளின் விடுதலை இழுபறி நிலையில் காணப்படுவதால் அவர்களுடைய குடும்பங்கள் படும் துன்ப துயரங்களையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

இவ்விவகாரத்தை கையாள நீதி அமைச்சின் கீழ் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பான அறிக்கை விரைவில் தரவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் தெரிவித்திருப்பதாகவும் அவ் அறிக்கை வெளிவந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் எம்மிடம் தெரிவித்தார்.

நாம் முன்வைத்த வலி, சம்பூர் மக்களுடைய மீள்குடியேற்றம், குடாநாட்டு நீர்மாசடைதல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விவகாரங்களின் நிலைமையை ஆராய குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அக்குழுக்களின் அறிக்கைகள் இரு வாரங்களுக்குள் வெளியிடப்பட்டு அதற்கிணங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதமரினால் எமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இவ்வறிக்கைகள் வெளிவந்த கையோடு இப்பிரச்சினைகளுக்கு விரைவாகவும் உடனடியாகவும் கடந்த அரசுகள் போன்று காலம் தாழ்த்தாது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் அரசு தரப்பிடம் வலியுறுத்தியிருந்தோம்.

அரசு தரப்பும் எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டதுடன், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எமக்கு உறுதியளிக்கப்பட்டது.