செய்திகள்

காணி விவகாரம்: நேரில் ஆராய அமைச்சர் சுவாமிநாதன் யாழ்ப்பாணம் செல்கிறார்

வட பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் பற்றி ஆராய்ந்து அவற்றில் படையினரால் பயன்படுத்தப்படாத தேவையற்ற காணிகளை விடுவித்து அக்காணி களுக்குரிய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை களுக்காக மீள் குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக வட பகுதிக்கு செல்கிறேன். தற்போது இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களில் அவர்களால் பயன் படுத்தாமல் வைத்திருக்கின்ற நிலங்கள் எவை என நாங்கள் முதலில் ஆராய வேண்டும்.

அதன் பின்னர் இவற்றை இனங் கண்டு இவ்வாறான நிலங்களை, உரி மையாளர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்தியதும் அவர்களிடம் கையளிக்கலாம். இது பாதுகாப்பை வழங்குவது என்ற இராணுவத்தின் அடிப்படை நடவடிக்கையை எவ் வகையிலும் பாதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவம் வடக்கில் பாதுகாப்பளிப்பதற்காகவே அங்குள்ளது. இராணுவம் தன்னை முகாம்களுக்குள் முடக்கிக்கொண்டு சிவில் நிர்வாகத்தை சிவில் நிர்வாகத்திடமும் பொலிஸாரிடமும் விட்டுவிட வேண்டும். நிர்வாக விடயங்களில் தலையிட வேண் டாம் என உயர் அதிகாரிகள் உரிய தரப்பினருக்கு உத்தரவை வழங்க வேண்டும். மக்களின் நாளாந்த வாழ்வில் அவர்கள் தலையிடாதவரை அவர்கள் இராணுவத்தை பிரச்சினையாக கருத மாட்டார்கள் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.