செய்திகள்

‘அனேகன்’ நாயகி அமைரா சமகளத்துக்கு அளித்த நேரடிப் பேட்டி

பார்சி மொழியை தாய் மொழியாகக் கொண்ட முதல் தமிழ் ஹீரோயின் அமைரா தஸ்தூர். கடந்த வருடம் ஹிந்தியில் வெளிவந்து சக்கை போடுபோட்ட ‘இஸ்க்’ படம் நினைவிருக்கிறதா…? ஆம். சாட்சாத் அந்தப் படத்தின் நாயகியேதான்.

இவர்தான் இந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கின்ற ‘அனேக’னில் தனுஷுக்கு நாயகி. விக்ரம் பட் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஹிந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவரை படப்பிடிப்பின் இடைவேளையில் ‘சமகள’த்திற்காக ஏ.வி.எம் மில் சந்தித்தோம்.

‘அமைரா’ என்றால் என்ன….?

பாரசீக மொழியில் ‘அமைரா’ என்றால் ‘இளவரசி’ எனப் பொருள். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அப்பா ஆசையாசையாக வைத்த பேர் அது. i simply love it.

அது சரி… உங்களை இளவரசியாக உணர்ந்த தருணங்களை சொல்ல முடியுமா…?

அப்பாவின் அருகாமை என்னை எப்போதும் இளவரசியாக உணரச்செய்யும். அதை விட காதலித்த போதும் அந்த உணர்வை அடைந்திருக்கிறேன்.

காதலித்திருக்கிறீர்களா….? ‘சமகளம்’ வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளலாமே…?

என் காதல் கதை எனக்கே எனக்கானது. அதை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் என்ன அந்தக் காதல்தான் முறிந்து விட்டதே.

‘இஸ்க்’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்தீர்கள். அனேகனில் முத்தக் காட்சி உண்டா…

‘இஸ்க்’ படத்தின் கதைக்கு அந்த முத்தக் காட்சி தேவைப்பட்டதால் நடித்தேன். ‘அனேக’னில் தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் பார்க்கலாம்.

Amyra-Dastur-Hot-and-Cute-Unseen-Image-11124525-22
‘அனேகன்’ வாய்ப்பு எப்படிக் கிடைத்தது…

‘இஸக்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கே.வி.ஆனந்த் என்னை டெஸ்ட் ஷூட்டிற்காக அழைத்துக் கதை சொன்னார். இதற்கிடையில் டெஸ்ட் ஷூட்டிலும் நான் தேர்வாக என்னைக் கதாநாயகியாக போட முடிவு செய்தார்.

தமிழ் தெரியாமல் நிறைய தடுமாறி இருப்பீர்களே…

வீட்டில் ஆங்கிலமும் பஞ்சாபியும்தான் பேசுவோம். ‘அனேகன்” நடிக்க ஒப்பந்தமானபோது தமிழில் எனக்கு ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தமிழ் வார்த்தைகள் உச்சரிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அப்புறம்….

படத்தின் முழு வசனத்தையும் ‘தமிங்கிலீ’சில் எழுதி மனப்பாடமாக்கி நடித்தேன்.

இப்போது தமிழ் தெரியுமா….

ஷூட்டிங் ஆரம்பித்த நாட்களில் தமிழ் கற்றுத் தருமாறு உதவி இயக்குநர்களைக் கேட்டேன். அவர்கள் கெட்ட வார்த்தைகளை மட்டுமே கற்றுத்தந்தார்கள். இப்போது தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரியும். [சிரிக்கிறார்]

தனுஷ், கார்த்திக் போன்ற திறமையான நடிகர்களுடன் நடித்துள்ளீர்களே…

‘ராஞ்சனா’ படத்தின் தீவிர ரசிகை நான். தனுஷ், ஷூட்டிங்கில் அமைதியாக இருப்பார். தேவையில்லாமல் பேச மாட்டார். ஆனால் ஆக் க்ஷன் சொன்னவுடன் அதகளம் பண்ணிவிடுவார்.

கார்த்திக் சார் இருக்கும் இடம் திருவிழா போல இருக்கும். சோகக் காட்சிக்கு முதல் நிமிஷம் வரைக்கும் சிரித்துக் கொண்டிருப்பார். ஆனால், ஆக்க்ஷன் சொன்னவுடன் கிளிசரின் இல்லாமலேயே அழ ஆரம்பித்துவிடுவார்.

தனுஷுக்கு இணையாக போட்டி போட்டு டான்ஸ் ஆடுவது கஷ்டமே…

நான் டான்சராக இருந்தாலும். தனுஷுடன் ஆடுவது மிகவும் சவாலாக இருந்தது. உடம்பில் எலும்பே இல்லாதவர் போல ஆடுவார்.

கஷ்டப்பட்டு ஆடிய பாடல்

பல தடவைகள் ரிகர்சல் பார்த்தாலும் ‘டங்காமாரி’ பாடலுக்கு ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது.

தமிழ் படத்தில் நடிப்பது பற்றி அப்பா அம்மா என்ன சொன்னார்கள்…

எனது பெற்றோர் சினிமா ஆர்வம் இல்லாதவர்கள். அவர்களுக்கு சினிமா பற்றி பெரிதாக எதுவுமே தெரியாது. ஆனால் எனது நண்பர்கள் தனுஷுடன் நடிப்பதை பெருமையாகப் பாராட்டினார்கள்.

தமிழ் நடிகைகள் ஹிந்தியை நோக்கி செல்கிறார்கள். ஹிந்தி நடிகைகள் தமிழை நோக்கி வருகிறார்கள்.ஏன் இந்தக் காட்சிப் பிழை?

இந்திய சினிமாவில் ஹிந்திக்கு அடுத்த பெரிய இண்டஸ்ரி தமிழ் சினிமாதான். அங்குள்ள நடிகைகள் இங்கு வர ஆசைப்படுவதும் இங்குள்ள நடிகைகள் அங்கு செல்ல ஆசைப்படுவதும் இயல்புதானே…?

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் முத்த மன்னன் இம்ரான் ஹஸ்மியுடன் நடிக்கிறீர்களே…

சூப்பர் ஹீரோ மூவி. இந்தப் படத்தில் நான் இம்ரான் ஹஸ்மியுடன் ரொமான்ஸ் செய்யவில்லை. அவரை துரத்தும் ஒருவராக நடித்துள்ளேன்.

அப்படியாயின் பேய்ப் படமா…

இல்லை. இல்லை. திரையில் பாருங்கள்.

இறுதியாக ‘சமகளம்’ வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன…

லவ் ஆல். பிளீஸ் ‘அனேகனை’ தியேட்டரில் மட்டும் பாருங்கள். திருட்டு வீசீடியை தவிருங்கள். ஒரு படத்தில் ஓராயிரம் பேர்களின் உழைப்பு உண்டு. அதற்கு மரியாதை கொடுங்கள். பிளீஸ்.

Issaq-Movie-002