செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொன்ற பாடசாலை அலுவலக உதவியாளர்

பெங்களூரில் பியூசி மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஒரு தலைக் காதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பவகடா பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி(18). அவர் ஒயிட்பீல்டு அருகே உள்ள காடுகோடியில் இருக்கும் பள்ளி ஒன்றில் பியூசி இரண்டாம் ஆண்டு அதாவது பிளஸ் 2 படித்து வந்தார். கௌதமி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அந்த பள்ளியில் பாடசாலை அலுவலக உதவியாளர் வேலை பார்த்து வந்த மகேஷ் (30) என்பவர் கௌதமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவர் மாணவியிடம் தெரிவித்தும் உள்ளார். ஆனால் மாணவி மகேஷின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் கடந்த சில மாதங்களாக மாணவியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் மாணவி மகேஷின் காதலை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மகேஷ் நேற்று இரவு 10 மணிக்கு மாணவியை சந்தித்து தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நடக்கையிலேயே மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கௌதமியை சுட்டார். இதில் கௌதமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து தடுக்க வந்த கௌதமியின் தோழி ஷிரிஷா படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிரிஷாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மகேஷை தேடி வருகிறார்கள்.