செய்திகள்

காத்தான்குடி நூதனசாலையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மட்டக்களப்பு காத்தான்குடி நூதன சாலையில் பல்வேறு அமைப்புகளின் அறிவுறுத்தலையும் மீறி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் காத்தான்குடி நகரசபையில் இது தொடர்பான பிரேரணையை கொண்டுவருவதற்கு காலம் தாழ்த்தும் நகர முதல்வரின் செயலைக்கண்டித்தும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் காத்தான்குடி நகரசபைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.வி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட பெருமளவானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.வி.எம்.பிர்தௌஸ் நளீமி,
பொறுப்புக்கூறவேண்டிய மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளியாத தன்மையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

காத்தான்குடியில் நூதன சாலை அமைப்பதற்கு நாங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் முஸ்லிம் மக்கள் நூறு வீதம் வாழும் இப்பகுதியில் அவர்களின் சமய வரமுறைகளுக்கு அமைய அமைக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிக்கை விடுத்துவந்துள்ளோம்.

ஆனால் நகரசபை தலைவர் அவற்றையெல்லாம் மீறி தன்னிச்சைப்போக்கில் இஸ்லாமிய மார்க்கங்களுக்கு அப்பால் அதனை அமைத்துள்ளார். இது தொடர்பில் காத்தான்குடி நகரசபை அமர்வில் விவாதிக்கவேண்டும் என நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதிலும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.இது ஒரு சர்வாதிகாரப்போக்கான நடவடிக்கையாகவே நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.

அத்துடன் இன்னும் சில நாட்களே நகரசபையின் ஆயட்காலமும் உள்ளது.இந்தவேளையில் இன்று நடைபெறும் அமர்விலாவது காத்தான்குடி நூதன சாலை தொடர்பில் விவாதிக்கப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் நாங்கள் அபிவிருத்திக்கு தடையானர்வகள் அல்ல அது அர்த்தமுள்ளதாக அமையாதவரை’,சிலைகள் அற்ற நூதன சாலையே எமக்கு வேண்டும்,அற்ப சலுகைகளுக்காக இறைகட்டளையை நிராகரிக்காதீர்,மக்கள் பிரதிநிதிகளே பதவிகளுக்காக மார்க்கத்தினை அடகுவைக்காதீர்,உலமாக்களை கொச்சைப்படுத்தாதீர் உட்பட பல வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை இன்று காலை காத்தான்குடி நகரசபை முதல்வர் தலைவர் எம்.ஏ.எச்.எம்.அஸ்வர் தலைமையில் நடைபெற்றபோதும் இது தொடர்பில் எந்த பிரேரணையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர முதல்வர் எம்.ஏ.எச்.எம்.அஸ்வர்,

இன்று காலை காத்தான்குடி நகரசபைக்கு முன்பாக இரண்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆனால் 15பேருக்கு மேல் அங்கு மக்கள் கலந்துகொள்ளவில்லை.இது தனிப்பட்டர்வகள்தான் கலந்துகொண்டதாக அறிந்துகொண்டேன். இலங்கை முஸ்லிம்களுக்காக காத்தான்குடி நகரசபையும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இணைந்து இந்த முஸ்லிம்களுக்கான பூர்வீக நூதன சாலையினை அமைத்துள்ளோம்.

இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களும் அடுத்த இடத்தில் உள்ள மக்களும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டுக்கு பூர்வீகம் அல்ல.வந்தான் வருத்தானாக இருந்தவர்கள் என்று தெரிவித்துவரும் நிலையில் கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் எங்கள் பூர்வீகம் உள்ளது என்பதை அந்த நூதன சாலை மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்.

உலக முஸ்லிம் நாடுகளில் எவ்வாறு முஸ்லிம்கள் உருவச்சிலைகளை அமைத்துள்ளார்களோ அதுபோன்றே சில உருவ பொம்மைகளை நாங்கள் அமைத்துள்ளோம்.இது தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது அகில இலங்கை ஜமியத்துல் உலமாக்கு பத்துவாவை தரும்படி தெளிவாக கூறியிருந்தோம்.இதுவரையில் எதுவித அறிவித்தலும் வரவில்லை.பத்துவாவை தந்தால் இஸ்லாத்துக்கு முரணாணதை நாங்கள் அகற்றுவதற்கு தயாராகவுள்ளோம்.

இதேபோன்று சவூதி அரேபியாவில் உள்ள உலமாக்களிடமும் இதுபோன்ற பத்துவாவை கோரியுள்ளோம்.அவர்களும் வருகைதந்து நூதன பார்வையிடுவதாக கூறியிருந்தார்கள்.இது முஸ்லிம்களுக்கு பிழையான விடயம் என்று நிருபீத்தால் அவற்றினை மாற்ற தாயராகவுள்ளோம்.

ஆனால் சிலர் இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

file147 file148 file152 file153 file159 file160 file163