செய்திகள்

காபுல் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: பலர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் மையப்பகுதியில் இன்று காலை தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பலர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அலுவலக நேரத்தில் காபுல் நகரின் இதயத்தைப் போன்ற மையப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலால் காபுல் நகரமே குலுங்கியதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் நூறடி தூரத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை, நேட்டோ ராணுவ தலைமையகம், அமெரிக்க தூதரகம் போன்றவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ள நிலையில், சரியான பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், இருபதுக்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே பலியானதாக உறுதிப்படுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலால் நேட்டோ ராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.