செய்திகள்

காரணமின்றி கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்!- விக்கிரமபாகு கோரிக்கை

காரணமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். என கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விக்கிரமபாகு கருணாரத்ன கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காரணமின்றி கைதுசெய்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதும் இல்லை. எந்தவொரு விசாரணையும் இல்லை. என்ன காரணத்துக்காக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர் என்றும் தெரியவில்லை.

தமது உறவுகளின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடக்கின் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே, நாட்டில் நல்லாட்சி நிலவவேண்டுமென்றால் சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சம்பிக்க ரணவக்க ஏன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிராக இருக்கின்றார் என்று தெரியவில்லை. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த விருப்பம் இல்லையோ என்று தெரியவில்லை. புதிய அரசான மைத்திரி அரசு, நாட்டைப் பிரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுக்கவில்லை. நல்லாட்சிக்கே வழிவகுத்து வருகின்றது. இதனை சம்பிக்க தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுதிவாரி தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்த முடியாது. இதனால் பல சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதிப்டையும். எனவே, இத்தேர்தல் முறைமை மூலம் மீண்டும் சர்வாதிகார ஆட்சியே அரங்கேற வாய்ப்புள்ளது. விருப்பு வாக்கு முறைமையை மாத்திரம் நீக்கி விகிதாசார தேர்தல் முறைமையைப் பாதுகாக்க வேண்டும்.