செய்திகள்

காலாவதியான அரசாங்கத்தை மாற்றியமைக்கும் வேளை வந்துவிட்டது: லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் இன்று காலாவதியான அரசாங்கமொன்றே காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றை நடத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி பொறுமையின்றி எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசிலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட கையோடு பாராளுமன்றம் கலைக்கப்படலாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசொன்றே அமைக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது:

“100 நாள் வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நான்கு விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டது. தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலையைப் பெற்றுக் கொடுப்பது, மலையக மக்களுக்கு சொந்தக் காணியில் தனி வீடுகள் அமைப்பதற்காக 7 பேர்ச் காணியும் வழங்கப்படுவது, தரக்குறைவான உரங்களுக்குப் பதிலான தரமான உரங்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது ஆகியனவே அவையாகும்.

இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு 600 மில்லியன் ரூபாவும் இறப்பருக்கு 400 மில்லியன் ரூபாவும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே இறப்பரை உத்தரவாத விலையில் பெற்றுக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இறப்பர் நிவாரணமாக 7.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 400 மில்லியன் ரூபா வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசாங்கம் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. கடந்த அரசாங்கம் வெளிநாடுகளைப் பகைத்துக் கொண்டதால் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் அவை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர்கள் இலங்கைக்குக் கடன்களை வழங்குவதில் மாத்திரமே ஆர்வம் காட்டினார்கள். சீனா போன்ற நாடுகளும் இலங்கைக்கு கடன்களை வழங்குவதையே விரும்பின.

தற்போது சர்வதேசத் தலைவர்கள் இலங்கைக்கு வருவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அவ்வாறே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீடுகளைச் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். நாம் பொதுத் தேர்தலின் பின்னர் 10 இலட்சம் தொழில்வாய்ப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க உள்ளோம். இதனைச் செய்வது கடினமான விடயமல்ல. வெளிநாடுகள் இலங்கையில் முதலீடுகளைச் செய்யும் போது அதனை இலகுவாகச் செய்யலாம்.

சர்வதேச நாடுகள் இலங்கையில் முதலீடு செய்யும்போது பாரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு இளைஞர், யுவதிகளுக்கு தொழில் பெற்றுக்கொள்வதற்கான சூழல் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.