செய்திகள்

கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பெர்ணான்டோவின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் நான்கை புலன்விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அனுமதியளித்துள்ளது.

அத்துடன் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் நிறைவேற்றதிகாரி கிருஷாந்த பெரேராவின் கணக்குகளையும் புலன் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அவ்விருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மனுவை பரிசீலனைக்கு உட்படுத்தி போதே, கொழும்பு நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிட்ட மேற்கண்ட அனுமதியை வழங்கியுள்ளார்.

குறித்த சம்மேளனத்தில், 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணையே இடம்பெறவுள்ளது.

கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, இந்திய ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளின் கொழும்புக் கிளைகளில் காணப்படும் வங்கிக் கணக்குகள் தொடர்பாக புலன்விசாரணை செய்வதற்கே நீதிமன்றம் அனுமதியத்துள்ளது.