செய்திகள்

காவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐ.தே.க. ஆதரவாளர் மரணம்: பிரதி அமைச்சர் தலைமறைவு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள காவத்தையில் இடம்பெற்ற எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சாந்தா தொடங்கொட என்ற ஐ.தே.க. ஆதரவாளர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகளில் முதலாவது கொலையாக இது உள்ளது. இவரது மரணத்தையடுத்து காவத்தை பகுதியில் நேற்றிரவு பதற்ற நிலை காணப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரா இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதி அமைச்சரையும் மற்றும் இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.  இருந்தபோதிலும், பொலிஸில் அகப்படாமல் பிரதி அமைச்சர் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்து வருகின்றார்.