செய்திகள்

காஸாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது!

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 42 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

காஸாவில் வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், காஸாவில் போரினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளது.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரையில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றில் 5000 குழந்தைகள் உள்ளடங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், காஸாவில் 1,800 குழந்தைகள் உட்பட 3,570-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் ஹமாஸ் படையினரை தேடும் பணிகளில் இஸ்ரேல்  இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த மருத்துமனையில் மின் துண்டிப்பு காரணமாக 40 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்ஸிஜன் மற்றும் நீர் தட்டுப்பாட்டினால் சுமார் 7,000 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காஸாவிற்கு எரிபொருள் விநியோகிக்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இணங்க, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காஸாவிற்கு எரிபொருள் வழங்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் தொகுதியாக 17,000 லிட்டர் எரிபொருளை காஸாவிற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை  அனுப்பியுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய நலனுக்காக தெற்குலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-(3)