செய்திகள்

கிரேக்க நாடகத்தில் தமிழ் சொல்லாட்சி

மருத்துவர். சி. யமுனானந்தா

கடலின் ஆழத்தை அழந்தாலும் தமிழின் தொன்மையை அளவிட முடியாது. ஏனெனில் பல கடல்கோள்களால் தமிழன் வாழ்விடம் யுகம் யுகமாக அழிக்கப்பட்டது. யுகப்புலப்பெயர்வுகள் தமிழ் சங்கத்தின் எச்சங்களையும் எடுத்துச் சென்றுள்ளது. முதலாவது தமிழ்ச்சங்கத்திற்கு முற்பட்ட தமிழே கிரேக்கமொழியாகத் திரிபடைந்துள்ளது. இரண்டாவது தமிழ்ச்சங்க காலத்திற்குரிய தமிழே எபிரேய மொழியாகத் திரிவு அடைந்தது.

ஏகு ஓடு என்ற தமிழ்ச்சொல்லே கிரேக்கத்தில் Exodus என்று மருவியது. திசைப்புறம் என்ற தமிழ்ச்சொல்லே Diaspora  என்ற கிரேக்கச் சொல்லாக மருவியது. பொலி (Poli) என்ற தமிழ்ச்சொல் குவித்து வைத்தல் என்ற பொருள்படும். இது கிரேக்கத்தில் Palus  ஆக மருவியுள்ளது.

திரை என்பது கடலைக் குறிக்கும். Thirai – Dria  –  Adrika என கிரேக்கத்தில் கடலைக் குறிக்க மருவியது.

கிரேக்க நாட்டில் கிரேக்க மொழியில் நடித்துக் காட்டப்பட்ட நகைச்சுவை நாடகமொன்றில் 44 தமிழ்ச் சொல்லாட்சிகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் தமிழ் ஒலித்த செய்தி வரலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் எகிப்து நாட்டு பாப்பிரசு சுருள் ஏட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பது தமிழர்கள் செய்த தவப்பயன் எனலாம். தமிழறிஞர் நீ. கந்தசாமிப்பிள்ளை அந்த கிரேக்க நாடகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

எகிப்து நாட்டு கீழ்கரை அக்குசிரிங் அகழ்வாராய்ச்சியில் மேற்கண்ட கிரேக்க நாடகத்தை 1889ம் ஆண்டு பெர்னார்ட் பி கிரன்கா மற்றும் இர்தர்எச் அண்ட் ஆகியோர் கண்டுபிடித்தனர். அந்த கிரேக்க நாடகத்தை லே அண்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மைசூர் பல்கலைக்கழகத்து பேராசிரியர் கோவிந்த பை என்பவர் அந்த முழு நாடகத்தையும் உள்ளபடியே ஆங்கிலத்தில் வெளியிட்டு அதில் உள்ள சொல்லாட்சிகள் கன்னடம் எனத் தன் கருத்தை வெளியிட்டார்.

அந்த நாடகத்தில் பிறமொழிச் சொல்லாட்சிகள் கடும் கொச்சையாகத் திரிந்த தமிழ்ச் சொற்களே என நிலைநாட்டி 1978ல் கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் என்னும் நூல் பேராசிரியர் இரா மதிவாணன் வெளியிட்டார். இந்த நாடகத்தில் கிரேக்க நாட்டுப் பெண்ணொருத்தி இன்றைய மங்களூருக்கு வடக்கே உள்ள மள்பி துறைமுகத்தில் சிவன் கோவில் ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்தாள் என்றும், அவளைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளது அண்ணன் கிரேக்கர்களின் துணையோடு வந்து மீட்டுச் சென்றான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் கரித்தியோன். ஆனால் உள்ளூர் மக்கள் அவளைக் கரியம்மா என்று அழைத்தனர். அந்தக் காலத்தில் கிரேக்கர்கள் மது வகைகளையும், கண்ணாடிப் பொருள்களையும் விற்கும்போது பெண்களையும் விற்பது வழக்கமாக இருந்தது. அதன்படி கரித்தியோன் சிறுமியாக இருந்தபோதே மன்பி சிவன்கோவிலிலும், நிலாப்பெண் தெய்வத்தின் கோவிலிலும் பணிப்பெண்ணாக இருந்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடைய அண்ணன் அங்கு வந்து கோவில் பணியாளர்களுக்கு மது வகைகளைக் கொடுத்து மயங்க வைத்து திருட்டுத்தனமாகத் தன் தங்கையைக் கப்பலில் ஏற்றி கிரேக்க நாட்டுக்கு அழைத்துச் சென்றான்.

கடற்கரையில் ஒரு கோமாளியுடன் கிரேக்கர்கள் வந்து கரித்தியோனை அழைக்கிறார்கள். அப்பொழுது கோமாளி ‘லேலே’ எனக் குரலெழுப்புகிறான். அங்கு வில் அம்புடனும், தண்ணீர் குடத்தோடும் சில பெண்கள் வருகிறார்கள். கோமாளி லே என்று அழைப்பதாக அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். எலே என்ற சொல் ‘லே’ என்று திரியும். கணவன் தான் தன் மனைவியை லே என்று அழைக்க முடியும்.

இதனால் கோமாளியைத் தாக்குவதற்காக அந்தப் பெண்கள் வருகிறார்கள். கோமாளி கரித்தியோனின் பின்னால் ஒளிந்துகொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றான். கரித்தியோன் அந்தப் பெண்களைப் பார்த்து அல்(ல)அல் எம் அக்கா என்கிறாள். அதாவது அக்கா அவன் உங்களைச் சொல்லவில்லை என்னைத் தான் சொன்னான் என்று அமைதிப்படுத்துகிறாள்.

கோமாளியைப் பார்த்து அந்தப் பெண்கள் சிரிக்கிறார்கள். கிரேக்கர்களும் கோமாளியைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு சிரிப்பு உண்டாக்குகிறது. அதன் பிறகு அங்கு வந்த கோவில் உரிமையாளர்களுக்கெல்லாம். மது வகைகளைக் கொடுத்து கிரேக்கர்கள் தப்பிச் செல்கிறார்கள். தப்பிச் செல்வதற்கு முன் கோவிலில் உள்ள விலையுயர்ந்த பொருள்களையும், தங்க நகைகளையும் திருடிக் கொண்டு வருமாறு கரித்தியோனின் அண்ணன் கூறுகிறான். தன்னை பாசத்தோடும் பாதுகாப்போடும் வளர்த்தவர்களின் கோவிலில் இருந்து எதையும் திருடமாட்டேன் என்றும் தந்தையின் முகத்தை பார்ப்பதற்காகத்தான் நான் கிரேக்கத்திற்கு வருகிறேன் என்றும் கரித்தியோன் கூறுகிறாள்.

இந்த நாடகத்தில் நீ கேள். இது ஒப்பியதே. யார் எம் அன்னர், கள்மகத்துபா (கள்முகந்துவா) அர்த்தம் அறிந்தோம் (பொருளறிந்தோம்) போன்ற 44 சொல்லாட்சிகள் இடம்பெற்றிருந்தது. கடல்கோள் மூலம் புலம்பெயர்ந்த முதற்சங்கத்திற்கு முற்பட்ட தமிழின் திரிபே கிரேக்க மொழியாகும்.