செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற போதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அது சார்ந்த அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்றுமில்லாதவாறு தொடச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக பன்னங்கண்டி, தட்டுவன் கொட்டி, அக்கரயான்குளம், கல்லாறு, சுண்டிக்குளம், கல்மடுநகர், ஊரியான், கண்டாவளை, ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அண்மையில் பன்னங்கண்டி பொது மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் சடலங்களையும் மனித எச்சங்களையும் அகற்றிவிட்டு சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம் பெற்ற நிலையில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும் இன்றுவரையும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் இப்பகுதியில் தொடர்ந்தும் தற்போதும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று கண்டாவளை தட்வன்கொட்டி, பகுதியில் பயிர் செய்கை நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன் பயிர் செய்கை நிலங்கள் சேதமடைகின்றன.
இதன்போது அப்பகுதி மக்களால் நான்கு தடவைகளுக்கு மேல் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் தற்போதும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு மணல் அகழ்வுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி நடைபெற்ற கரைச்சிப்பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஆகியவற்றிலும் இதனைக்கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கடந்த முதலாம் திகதி கண்டாவளைப் பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இச்சட்டவிரோத மணல் அகழ்வுகள் பாரிய பிரச்சினையாக எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இவை தீர்மானங்களாகவே இருக்கின்றனவே தவிர இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவித  நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்குறித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடும் கனரக வாகனங்கள் உழவு இயந்திரங்கள் இதனைக்கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளின் பாதுகாப்புடன் பக்குவமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்டு திரும்புகின்றன என்றும் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் காரணமாக பெருமளவான விவசாய நிலங்கள் சேதமடைந்து எதிர்காலத்தில் பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாமலும் வீதிகள் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாமலும் சேதமடைந்து காணப்படுவதுடன் பெருமளவான வளங்கள் அழிவடைந்து வருகின்றபோதும் இதுவரை இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த எந்த அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் சிவில் சமுக பிரதிநிதிகள் எனப்பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனைக்கட்டுப்படுத்த வேண்டிய பொலிசாரின் துணையுடன் குறித்த குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன எனவும் மேற்படி சமுகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
N5