செய்திகள்

கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் தம்மை மீளக் குடியமர்த்த அழுத்தம் கொடுக்கும் முகமாகவும், குத்தகைக்கு காணியை பெற்றுக்கொண்ட (கேற்வே) நிறுவனம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை மீளப் பெறக் கோரியும் இரண்டாவது நாளாகவும் கிளிவெட்டி, நலன்புரி நிலையத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடர்கிறது.

இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் நேற்று (செவ்வாய்க் கிழமை) 19.05.15 உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் தொடக்கி வைத்தார். மூதூர் கிழக்கு பகுதியில் உள்ள கட்டை பறிச்சான் நலன்புரி நிலையத்தில் உள்ளோரும் பொது மக்களும் இதில் பங்கெடுத்தனர்.

இதேவேளை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று புதன்கிழமை மூதூர் பிரதேசத்தில் மல்பிகைத்தீவு, சேனையூர், பெருவெளி, ஈச்சிலம்பற்று போன்ற கிராமங்களிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

திங்கட்கிழமை 18.05.2015 கிளிவெட்டியில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும் க. செந்தூரன் எம்மை மீளவும் சொந்த இடத்தில் குடியேற்றும் வரை தான் இதனை மீளப் பெறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் இப்போராட்டம் மக்கள் போராட்டமே தவிர எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு திரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொன்று அல்ல எனவும் தெரிவித்தார்.