செய்திகள்

கிழக்கில் அமைச்சர் பதவி ஒன்றும், தவிசளர் பதவியையும் கூட்டமைப்புக்கு வழங்க மு.கா. இணக்கம்

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மாகாண அமைச்சர் பதவியும் தவிசாளர் பதவியினையும் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பினை அடுத்து நேற்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் மஜீத் மற்றும் அக்கட்சியின் ஊடகப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரட்ணம், கே. துரைராஜசிங்கம், பிரசன்னா, ஜனா  மற்றும் எம். நுடராஜன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் அமையவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பாக இதன்போது விரிவாக  கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மாகாண அமைச்சர் பதவியும் தவிசாளர் பதவயினையும் வழங்க இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடிவிட்டு நாளை அறிவிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.