செய்திகள்

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் வழமையான ‘துரோகத்தை’ அரங்கேற்றியுள்ளது: குகவரதன்.

மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டுமென ஒரு முகத்தைக் காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை விடயத்தில் தனது வழமையான துரோகத்தனமான மறுமுகத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களையும் ஏமாற்றிவிட்டதென்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சண்.குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கிழக்கு மாகாணசபையில் ஆரம்பத்தில் ஆட்சியமைக்கும் போதும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்பேசும் மக்களுக்கு துரோகமிழைத்தது. அன்று தேர்தலில் தனித்து போட்டியிட்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்த காங்கிரஸ், பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பை புறக்கணித்துவிட்டு மகிந்தவுடன் இணைந்து ஆட்சியமைத்தது. இன்றும் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துவிட்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை விடயத்தில் தனது வழமையான துரோகத்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

அங்கு தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்து முதலமைச்சர் பதவி தொடர்பில் விட்டுக்கொடுப்பு செய்து இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுடிருந்தார். கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம் தமிழ் மக்களின் அரசியல் பலம் மட்டுமல்ல மத்திய அரசிலும் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தமது சமூகத்தினரின் நன்மைகளுக்காக அழுத்தம் கொடுக்கக்கூடிய பலமுள்ள வகிபாகத்தை வகுத்திருக்கலாம்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சிறப்புரிமைகளுக்காகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து மறைந்த தலைவர் அஷ்ரப்பின் உயரிய நோக்கங்களை குழிதோண்டிப் புதைத்துள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு வட கிழக்கில் தமது அரசியல் பலத்தை பெரும்பான்மை ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தி தமது மக்களின் மறுக்கப்படும் உரிமைகளை பெற்றுக்கொள்ளவே தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். ஆனால் அவர் உருவாக்கிய விருட்ஷத்தை வேரோடு பிடுங்கி எறியும் முடிவுகளை ஹக்கீம் முன்னெடுக்கின்றார்.