செய்திகள்

கிழக்கில் முஸ்லிம் மாணவர்களே கூடுதலாக கற்கின்றனர்: பொன்.செல்வராசா

IMG_0110 IMG_0112 IMG_0188

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அதிகமாகவுள்ள நிலையிலும் தமிழ் மாணவர்களை விட 8500 முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் பாடசாலைகளில் கல்வி கற்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இனவிகிதாசாரத்திற்கு அப்பால் கல்வியாளர்களாகவும் கற்றவர்களாகவும் முஸ்லிம் மக்களே இருப்பார்கள் எனவும் இதனை நான் இனவாத கண்ணோட்டத்துடன் கூறாமல் நான் சார்ந்த சமூகத்தினை விழிப்படைய செய்யவேண்டும் என்பதற்காக கூறுவதாக தெரிவித்தார்.

நேற்று மாலை பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் நாங்கள் கிரிக்கட் போட்டிகளை நடாத்துகின்றோம்.சிலநேரம் மாவட்டத்துக்குள் வெளியே மாகாணத்துக்குள் நடாத்துகின்றோம்.ஆனால் அதில் இருந்து மாகாணத்துக்கு வெளியே வடக்கிலோ தெற்கிலோ ஒரு போட்டியை நடாத்தமுடியாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

நாங்கள் மாகாணத்துக்கு வெளியே தெற்கிலோ அல்லது வடக்கிலோ போட்டியை நடாத்துவதன் மூலம் எமது திறமையினை வெளிப்படுத்துவதன் மூலமே நாங்கள் தேசிய ரீதியான அணிகளில் இணைவதற்கான வாய்ப்புகளை பெறமுடியும்.இதில் கல்வித்திணைக்களம் அக்கரையெடுக்கவேண்டும் என்று கேட்டு;க்கொள்கின்றேன்.

நாங்கள் விளையாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குபவர்களாக இருக்கமுடியாது.அதேயளவு கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.கடந்த 35வருடகால யுத்தம் காரணமாக நாங்கள் இழந்த கல்வியை மீட்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

நான் இங்கு ஒன்றை சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இருக்கின்றது.நான் பிரதேசவாதமோ,இனவாதமோ பேசவில்லை.இன்று கிழக்கு மாகாணத்தில் எமது சமூகத்தின் கல்வி கற்றல் நிலைமையினை பேசவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இன்று கிழக்கு மாகாணத்தில் இனவிகிதாசரம் சமமாகவுள்ள நிலையில் முஸ்லிம் மாணவர்கள் 2015ஆம் ஆண்டு எங்களை விட 8500பேர் கூடுதலாக கல்வி கற்றுவருகின்றனர்.ஆனால் இது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஓரு ஆண்டில் 8500 மாணவர்கள் அதிகளவில் கற்கின்றார்கள் என்றால் இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துச்செல்லும்போது பத்து ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் விகிதாசாரத்தில் கல்வியாளர்கள்,அதிகாரிகள் முஸ்லிம்களாகவே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.இனத்தின் வறுமைத்தன்மை,புவியியல் தன்மையே இதற்கு காரணங்களாக இருக்கலாம்.முஸ்லிம் மக்கள் அதிகளவில் நகரத்தினை அண்டிய பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.

இது இனவாதம் அல்ல.நான் ஒரு இனத்தினை சேர்ந்தவன் என்ற காரணத்தினால் அந்த இனத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாக இதனைப்பேசிக்கொண்டிருக்கின்றேன். இனத்தின்பால் கொள்ளும் அன்பு இனவாதமாகாது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் அந்த இனத்தின் பெருமைமிக்க போராளிகள் என்று சொல்லப்படுகின்றதே தவிர அவர்கள் நிச்சயமாக பயங்கரவாதிகள் என்று கூறப்படமாட்டார்கள்.அந்தவகையில் இனத்தின்பால் பேசும்போது நான் இனவாதியாக மாறமாட்டேன்.

மாணவர்கள் தங்களுக்குள்ள வறுமையினை தள்ளிவைத்துவிட்டு கல்வி கற்று முன்னோக்கிவரவேண்டும்.சிலவேளைகளில் புவியியல் எமக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம்.படுவான்கரையில் பாடசாலைக்கு செல்வதானால் சில மாணவர்கள் ஐந்து ஆறு கிலோ மீற்றர் தூரம் நடந்தே செல்லவேண்டிய நிலையிருக்கின்றது.

இந்த நிலையினை மாற்றுவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் ஆரம்பபிரிவு பாடசாலைகளை அமைப்பதற்கு கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடவடிக்கையெடுத்துவருகின்றது.