செய்திகள்

கிழக்கு அபிவிருத்திக்குழுவின் தலைவராக ஹாபிஸ் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாரை,மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்:

குறித்த நியமனமானது ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கும் முக்கிய அபிவிருத்திக் கடமைகள், அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடையங்கள் தொடர்பாக சரியாக ஆராய்ந்து இனங்கண்டு ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேவையான சேவைகள் என்ன.? கட்டாயம் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் என்ன.? என்பதனை எல்லாம் சரியாக இனங்கண்டு உரிய அதிகாரிகள் அரசியல் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி சரிவர செய்ய வேண்டியது கடமை. எனவே எனக்கு சுமத்தப்பட்ட கடமையினை நான் சரியாகச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் பின் தங்கியுள்ள பெரும் தேவையுள்ள மாகாணம். ஏன் என்றால் கடந்தகால யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்ட இடங்கள், மக்களின் இருப்பிடங்கள் இன்னும் சரி செய்து கொடுக்கப்படவில்லை, அதுபோன்று அரச நிறுவனங்கள் சில இன்னும் பொதுமக்களின் இடங்களில் இருப்பதும் நாம் அறிந்த விடையம்.

எனவே கிழக்கு மாகணத்தின் தேவைப்பாடுகள் ஏராளமாக இருக்கின்ற காரணத்தினால் அவசரமாக கிழக்கை கட்டி எழுப்ப வேண்டிய பெரும் பொறுப்பினை கிழக்கின் முதலமைச்சர் என்ற வகையில் மக்கள் என்னிடம் சுமத்தியுள்ளனர். எனவே நான் கிழக்கு மாகாண ஏனைய அமைச்சர்களுடன் சேர்ந்து மக்கள் குறைகளை அவசரமாக கேட்டறிந்து, கிழக்கின் சகல பாகங்களுக்கும் மூவின மக்களுக்கும் சிறப்பான சேவையினைச் செய்யவேண்டிய கட்டாயத்தேவையும் பொறுப்பும் எங்களிடம் உள்ளது.

ஆகவே கிழக்கு மாகாண அபிவிருத்தி என்கின்றபோது பாதிக்கப்பட்ட இடங்கள், கவனிக்கப்படாத இடங்கள், மக்களின் அன்றாடத் தேவையான முக்கிய இடங்களின் சேவைகள் என்பன கட்டாயம் முன்னுரிமை வழங்கி செய்யப்பட இருக்கின்றன.

அத்துடன் தங்களின் காணிகளை இழந்து பிறரின் இடங்களில் வாழும் மக்களின் காணிகளை உரியவர்களிடம் பெற்றுக்கொடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பிடம் அவர்களிடம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சகல மக்களும்  அவர்களின் சொந்தமான இடங்களில் உரியவர்களை குடியமர்த்த அவசர நடவடிக்கையினை துரிதமாக செய்து முடிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் என்றவகையில் மாகாண சபையின் ஏனைய அமைச்சர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.