செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் யார்? ஹக்கீமே தீர்மானிப்பார்

கிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலைமைச்சர் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு குறித்த இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனால் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நீங்கள் அனைவரும் இணைந்து ஒருவரின் பெயரினை முதலமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யுமாறு கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் பதவியினை யாருக்கு வழங்குவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளும் அதிகாரத்தினை தலைவருக்கு வழங்குவது என தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் ஹக்கீமை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்தினை கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அமைச்சர் ஹக்கீம் தனித் தனியாக சந்தித்து முதலமைச்சர் பதவி தொடர்பில் கருத்துக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.