செய்திகள்

கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? இன்று இறுதி முடிவு

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறும் எனத் தெரியவந்திருக்கின்றது. இது தொடர்பில் மு.க.வுடன் கூட்டமைப்பு ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. இதன் அடிப்படையில் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இன்றும் சந்திப்பு தொடரும் எனத் தெரிகின்றது.

இந்தப் பேச்சுவார்த் தைகளைத் தொடர்ந்து கட்சியில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது. கிழக்கு மாகாண அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களில் இரண்டு அமைச்சர் பதவிகளை கூட்டமைப்புக்கு வழங்க தாம் தயாராகவிருப்பதாக ஹக்கீம் உறுதியளித்திருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

அதேநேரம், கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கும் அழைப்பைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் இந்த அழைப்பை விடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தவறிழைத்துவிட்டது. இருந்தபோதும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் அழைப்பை பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.