செய்திகள்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நசீர் அஹமட்டை நியமிக்க மு.கா. தீர்மானம்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பெயரை முன்மொழிய அக்கட்சி தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் அடுத்த இரண்டரை ஆண்டு பதவிக் காலத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டு முதலமைச்சர் பதவிக்குரிய பெயர் கட்சியின் தலைவரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்சி உறுப்பினர்களின் ஆதரவை ஹக்கீம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.