செய்திகள்

கிழக்கு மாகாண சபையில் இரு அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளரான ஆரியவதி கலபதி கல்வி மற்றும் காணி அமைச்சராகவும் எம்.ஐ.மன்சூர் வீதி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநரான ஒஸ்டின் பெர்னாண்டோவின் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கு இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டபோதிலும் இது வரையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.