செய்திகள்

கிழக்கு மாகாண சபை விவகாரம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடி ஆராயும்

கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும், பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராயும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதனால், தமது உறுப்பினர் ஒருவரே மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்தி வந்திருந்தது.

இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக சாதகமான முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரின் பெயரை முன்மொழிந்துள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரான பஸீர் சேகு தாவுத் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் யோசனையொன்றை முன் வைத்துள்ளார்.

அடுத்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் முதலமைச்சர் பதவியை, ஒருதரப்பு ஒரு ஆண்டும் மறுதரப்பு ஒன்றரை ஆண்டுகளும் பகிர்ந்துகொள்ள முடியும் என்று பஸீர் சேகு தாவுத் தனது யோசனையில் தெரிவித்துள்ளார்.

பஸீர் சேகு தாவுத்தின் கடிதம் கிடைத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் உறுதிப்படுத்தினார். அவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை தொடர்பாக இன்று  வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் கூடி ஆராய்ந்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.