செய்திகள்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை பெரிதும் நேசிக்கின்றனர்: பொன்.செல்வராசா

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வடக்கு மாகாண மக்களை விட தமிழ் தேசியத்தை பெரிதும் நேசிக்கின்றனர் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் 49வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

காலம்காலமாக தமிழ் மக்களை அரசாங்கங்கள் இந்த நாட்டில் மக்களை ஏமாற்றியேவந்துள்ளன. காலத்துக்கு காலம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் கிளித்தெறியப்பட்டனவே தவிர எந்த ஒப்பந்தங்களும் சாதமான முறையில் பரிசீலிக்கப்பட்டதாக சரித்திரமே இல்லை.இதன் காரணமாகவே 35வருடமாக ஆயுதம் ஏந்தி போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது.

2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு உட்பட மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழர்களை யார் பாதுகாப்பது என்ற நிலையெழுந்தபோது அதன் பின்னர் வந்த தேர்தலில் இந்த நாட்டின் தமிழர்களின் பாதுகாவலர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்கள் எடுத்துக்காட்டினர்.இங்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கே எடுத்துக்காட்டினர்.

கிழக்கு மாகாணத்து மக்கள் தமிழ் தேசியத்தினை வடக்கு மாகாணத்தினை விட கூடுதலாக நேசிக்கின்றனர்.அதனை கடந்த கால தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரை அது தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யாது.நாங்கள் முதன்முறையாக நடந்த தேர்தலில் தோற்றவில்லை.எனினும் அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குகொண்டது. அரசியல்வாதிகளாக வருவதற்கு தகுதியில்லாவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாக்கிக்கொண்டுள்ளோம் என்பதற்காக கட்டாயமாக மாகாணசபை தேர்தலில் பங்குபற்றவேண்டிய தேவையினை ஏற்படுத்தியது.

மத்திய அரசாங்கத்தில் நாங்கள் அமைச்சு பதவிகளை ஏற்கும்போது அது எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுக்கமுடியாத நிலையேற்படும் என்பதற்காகவே நாங்கள் அதில் பங்குபற்றவில்லை.என்று எமது மக்களின் அபிலாசைகள் இந்த நாட்டில் என்று பூர்த்திசெய்யப்படுகின்றதோ அன்றுதான் எங்கள் குரல் அடங்கும்.அதுவரையில் எமது குரல் ஒலித்துகொண்டே இருக்கும்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு சோதனைகள் வேதனைகள் எல்லாம் வரும்போது அதற்கு எதிராக குரல்கொடுக்கும் ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.தமிழர்களின் காணிகள் கபளீகரம் செய்தபோது, தமிழர்களின் விகிதாசாரத்தினை குறைப்பதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது இதனை எதிர்த்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமே.அன்று அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த எந்த தமிழ் அரசியல்வாதியும் கேட்கவில்லை.

செங்கலடி,மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் காணிகளை அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் அபகரித்து அவற்றினை கபளீகரம் செய்தபோது அதனை உயர்மட்டம் வரை கொண்டுசென்று தடுத்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

இராணுவ நடவடிக்கையில்லாத நிலையிலும் ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அபகரித்தபோது அங்கு அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அதற்கு எதிராக குரல்கொடுக்கமுடியாதநிலை, அதற்கு எதிராக பாராளுமன்றில் கூட குரல்கொடுக்காத நிலையே இருந்தது.ஆனால் அதற்கெதிராக தமிழ் மக்கள் திரண்டெழுந்தார்கள்.இவர்களுடன் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களும் ஒன்றுதிரண்டு கடந்த அரசாங்கத்தினை மாற்றியமைத்தனர்.

நல்ல அரசாங்கம் என்று கூறமுடியாவிட்டாலும் நல்ல தலைவரை பெற்றுள்ளோம்.ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நல்ல தலைவர்,இரக்கசுபாவம் கொண்டவர் என்ற காரணத்தினால் இன்று ஆயிரம் ஏக்கர் காணியை திருப்பித்தர முன்வந்துள்ளார்.900 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் சில பகுதிகளுக்குள் காணி உரிமையாளர்களை அனுமதிக்க இராணுவம் மறுத்துவருகின்றது.

இந்த நிலைமை மாறவேண்டும்.எந்த அரசாங்கம் வந்தாலும் இராணுவம் வாள் காட்டமுடியாது என்பதற்காகவே புதிய அரசியல்தலைமையினை தெரிவுசெய்தோம்.பத்து ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை இந்த நாட்டில் தமிழ் இனம்,சோதனைகளை வேதனைகளை எதிர்கொண்ட தமிழினம் திரண்டெழுந்து ஆட்சிமாற்றத்தினை செய்தனர்.

ஆகவே அந்த ஆட்சி பலமாக இருக்கவேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு தேர்தல் வருவதற்கான வாய்ப்புள்ளது.மீண்டும் ஒரு தடவை நாங்கள் பலமான அரசை ஏற்படுத்தி தமிழர்கள் இழந்த எல்லாவற்றையும் மீளப்பெறுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

இன்று புதிய அரசாங்கம் அமைந்துள்ளபோதிலும் பாராளுமன்றில் அதிகபெரும்பான்மையில்லாத காரணத்தினால் எதனையும் தற்துணிவுடன் நிறைவேற்றக்கூடிய நிலையில்லை.

19ஆம் திருத்தச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதுவெற்றிபெறுமா,தோல்விபெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது. அந்தளவுக்கு பாராளுமன்றில் வாக்குப்பலம் குறைந்த அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் உள்ளது. பாராளுமன்றில் அதிக உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் கொண்டதாக இன்றை அரசாங்கம் உள்ளது.இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற அரசாங்கம் இருந்ததில்லை.

இந்த நிலையில் நாங்கள் அரசாங்கத்தினை பாதுகாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.இன்று தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சில விடயங்களுக்கு இந்த அரசாங்கம் பச்சைக்கொடியை காட்டியுள்ளது.ஆகவே தேர்தல் வரும்போது மீண்டும் ஒரு தடவை நாங்கள் இனத்தினை பாதுகாப்பதற்காக ஒன்றுதிரண்டு வாக்களிக்கவேண்டும்.

1 (4) 1 (5) 1 (6) 1 (7) 1 (9) 1 (10)