செய்திகள்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை மாதாந்த கொடுப்பனவு

கிழக்கு மாகாண முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பான நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிவரும் முன்பள்ளி ஆசியர்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்துவந்த மாதாந்த கொடுப்பனவினை வழங்க கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ எழுத்துமூலமான அனுமதியை வழங்கியுள்ளார்.
மிகநீண்டகாலமாக பலராலும்பேசப்பட்டுவந்த இந்த முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விடயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆரம்பகாலம் தொடக்கம் மாகாணசபை உறுப்பினர்களாலும்,அரசியல்வாதிகளினாலும் முன்பள்ளி ஆசிரியர்களினாலும் அதிகாரிகளினாலும் பேசப்பட்டுவந்தது.

இந்த முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு விடயத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி அவர்கள் தனது அமைச்சின் கீழ் பாலர்பாடசாலை கல்விப்பணியக நிர்வாகத்தினை கொண்டுவந்ததன் பின்னர் முதல் முயற்சியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட தலைமையிலான அமைச்சரவைக்கு கடந்த வருடம்(2015-06-17)முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்திருந்தார்.இந்த முன்பள்ளி கொடுப்பனவிற்கான அனுமதி அனைத்து அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது

2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையின் அப்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட மாகாண பாலர்பாடசாலை பணியகத்தில் இதுவரையில் 1832 முன்பள்ளிகள் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.இதில் 4065 முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.இவர்களில் 3537 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக 3000ரூபா வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த வருடம் யூன் மாதம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதியை கிழக்கு மாகாண அமைச்சரவை வழங்கியிருந்தபோதிலும் இதற்கான முழுமையான அனுமதி உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் முன்பள்ளி பணியக அலுவலர்களும் பணியக வாரிய அங்கத்தவர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் மாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் கிழக்கு மாகாண ஆளுனரை சந்தித்து இதன் முக்கியத்தும் தொடர்பில் எடுத்துக்கூறியதன் பயனாக கொடுப்பனவிற்கான முழுமையான அனுமதியை ஆளுனர் வழங்கியுள்ளார்.

வருடாந்தம் இதற்கான கொடுப்பனவினை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இதற்கான கொடுப்பனவினை கல்வி அமைச்சின் நிதிப்பிரிவின் மேற்பார்வையுடன் பாலர் பாடசாலை பணியகம் ஊடாக நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இந்த கொடுப்பனவுக்காக ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான கொடுப்பனவினை வழங்குவதற்கு மூன்று கோடியே 13 இலட்சத்து 33ஆயிரம் ரூபாவும்(31 833 000)வருடாந்தம் கொடுப்பனவினை வழங்குவதற்கு 12கோடியே 73 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவும்(127 332 000)வழங்க அனுமதி கவழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமாலை மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் 840பேருக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கலந்துகொள்ளவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

n10