செய்திகள்

கிழக்கு முதல்வர் விவகாரம்: தொடரும் சர்ச்சை! பெரும்பான்மையை நிரூபிப்பதில் நெருக்கடி

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் பல நாட்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னர் புதிய முதலமைச்சர் ஒருவர் பதவியேற்றுள்ள போதிலும் புதிய ஆட்சியமைப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நசீர் அஹமட் மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

இருந்தபோதிலும், பெரும்பான்மையை நிரூபிப்பதில் முகா. தலைமை நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும் அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை நாடியிருப்பதாகவும் தெரியவருகின்றது. கூட்டமைப்பை மு.கா. தலைமை இது விடயத்தில் இன்று சந்திக்கும் எனத் தெரிகின்றது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு கட்சித் தலைமைகளுக்குக் கூட தெரியாமல் உறுப்பினர்களின் ஆதரவு உறுதிப் பத்திரம் பெறப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ முன்பாக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்ட போது...

ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ முன்பாக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்ட போது…

2012-ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி என்று கூறுகின்றது.

இதனை சுட்டிக்காட்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், முதலமைச்சர் பதவி விடயத்தில் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை பெறாமல் அவசர அவசரமாக செயற்பட்டமைக்கான காரணங்களை புரியமுடியாமல் இருப்பதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரை முதலமைச்சர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று கருதமுடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வசிப்பதால் முதலமைச்சர் பதவிக்கு தான் வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் அது சாத்தியப்படவில்லை.

இந்த இரண்டு கட்சிகளையும் விட குறைவான ஆசனங்களையே ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாணசபையில் கொண்டுள்ளது.

தான் முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரும் ஆதரவாக இருந்தாலும் துரதிஷ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதற்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்றார் தயா கமகே.

அடுத்த சில மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த நிலையில், அதுவரை மட்டுமே முதலமைச்சர் பதவியை வகிக்க எதிர்பார்த்து தயா கமகே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.