செய்திகள்

குஜாராத் மாநாட்டில் பங்குகொள்வதற்காக மூன் இந்தியா வருகை

குஜராத்தில் நடைபெறவுள்ள “7-வது எழுச்சிமிகு குஜராத்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் சனிக்கிழமை இந்தியா வந்தார்.

இந்த மாநாடு குஜராத் தலைநகர் காந்தி நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தில்லி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த அவரை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். அவருடன் இந்தியாவுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி லிசே கிராண்டும் வந்துள்ளார்.

இதுகுறித்து வதோதரா மாவட்ட ஆட்சியர் வினோத் ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பான்-கி-மூன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குஜராத் மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்துகிறார்.

அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அவர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தையும் பார்வையிடுகிறார். இதனைத்தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் பான்-கி-மூன் சந்தித்துப் பேசுகிறார் என்றார் வினோத் ராவ்.

இதனிடையே, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் திறந்து வைப்பார் என அந்த மாநில மின்துறை அமைச்சர் சௌரவ் படேல் தெரிவித்தார்.