செய்திகள்

குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் பணியில் நிபுணர்கள் அனைவரையும் கரம் கோர்க்குமாறு அழைப்பு

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கையொப்பமிட்டுக் கூட்டாகச் சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில்,

சுன்னாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடிநீரில் எண்ணெய் கலந்துள்ளது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கை தொடர்பாகவும், இதை முன்னிறுத்தி வடக்கு மாகாணசபை தொடர்பாகவும் சிலரால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது எமது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால், இது தொடர்பாக கௌரவம்மிக்க இந்த மன்றில் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஒன்பது துறைசார் வல்லுநர்களை உள்ளடக்கிய நிபுணர்குழு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள துறைசார்ந்தவர்களின் நிபுணத்துவ ஆலோசனைகளுடனேயே ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள் இங்கு வரவழைக்கப்பட்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆய்வுகள் கொழும்பில் உள்ள ஐவுஐ எனப்படும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், தொண்டைமானற்றில் அமைந்துள்ள நீரியல் ஆய்வு மையத்திலும் இடம்பெற்று வருகின்றன.

நிபுணர்குழுவினர் சுன்னாகம் அனல்மின்நிலையத்தை மையப்படுத்தி எட்டுத் திசைகளிலும் 200 மீற்றர் இடைவெளியில் 2 கிலோமீற்றர் தூரத்துக்கான மாதிரி வலையமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில், முதற்கட்டமாக ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினுள் 40 கிணறுகளில் சேகரிக்கப்பட்ட நீர்மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 கிணறுகளிலும், யாழ் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியற்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 17 கிணறுகளிலும் மொத்த எண்ணெய் மற்றும் கிறீஸின் அளவு சர்வதேச நியம அளவிலும் பார்க்க அதிகமாகக் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த அளவுகளை நீர் மாதிரியில் மாசாக இருந்திருக்கக்கூடிய எண்ணெய் மற்றும் கிறீஸின் துல்லியமான அளவுகளாகக் கொள்ளமுடியாது என்பதே சர்வதேச ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், நீரில் கலந்திருக்கும் எண்ணெய் மற்றும் கிறீஸின் அளவை அளவிடுவதற்கு நீரில் உள்ள மொத்த ஐதரோகாபன்களை அளவிடும் முறையே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. இம்முறையில், எண்ணெய் மாசின் கூறுகளாக அல்லாத, தண்ணீரில் கலந்திருக்கக்கூடிய விலங்குப் புரதங்கள், மெழுகுகள், கனிய மற்றும் தாவர எண்ணெய்கள், சவர்க்காரம், குளோரபில் போன்ற பல கூறுகளிலுள்ள ஐதரோகாபன்களும் சேர்த்தே அளவீடு செய்யப்படுகிறது. இதனால், இம்முறையில் பெறப்படும் அளவீடுகள் மாசாக இருக்கக்கூடிய எண்ணெய் மற்றும் கிறீஸின் அளவைவிட உயர்வாகவே காணப்படும் என்பதும், இம்முறையானது சட்ட வலுவற்றது என்பதும் சர்வதேச ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இவற்றின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் கிறீஸில் இருக்கக்கூடிய ஐதரோகாபன்களின் அளவை மட்டுமே அறியக்கூடிய கருவியின் தேவை பற்றி நிபுணர்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எண்ணெயில் பல நூறு இரசாயனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் அறியவல்ல தனித்த ஒரு கருவி இல்லாததால், எண்ணெயில் இருக்கக்கூடிய ஆபத்தான இரசாயனங்களை அளவிடவல்ல குசுழுபு 4000 என்னும் கருவி அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டது. பலகட்ட நிபுணத்துவ ஆலோசனையின் பின்பு பொருத்தமான கருவியெனத் தெரிவு செய்யப்பட்ட இதனை அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தினரும் அவுஸ்திரேலியத் தமிழ் உறவுகளும் இணைந்து நிதிப்பங்களிப்புச் செய்து வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். குசுழுபு 4000 கருவியைப் பயன்படுத்தி, நிபுணர்குழுவினர் தொண்டைமானாறு நீரியல் ஆய்வு மையத்தில் மேற்கொண்ட ஆய்;வின் முடிவுகளையும் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி, எந்வொரு நீர்மாதிரியிலும்உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய டீவுநுஓ எனப்படும் பென்சீன், தொலுயீன்,ஈதையில் பென்சீன், ஓதோ சைலீன், பரா சைலீன் மற்றும் மெற்றா சைலீன் போன்ற இரசாயனங்கள் சர்வதேச நியம அளவுக்கு மேற்பட்டு இருக்கவில்லை. மாறாக, 85 சதவீதமான மாதிரிகளில் முற்றாக இல்லாமலும் 15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் 200 மடங்குள் குறைவான அளவிலும் காணப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினுள் எடுக்கப்பட்ட நீர்மாதிரிகளில் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்;வு முடிவுகளின்படி பாரஉலோகங்களான ஈயம், இரும்பு, கட்மியம், வனேடியம், ஆர்சனிக், நிக்கல், நாகம் ஆகியவை கண்டறியப்படவில்லை. இந்த ஆய்வு முடிவுகள் யாவற்றையும் உள்ளடக்கியதாகவே நிபுணர்குழு தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கென வடக்கு மாகாண அரசினதும் மத்திய அரசினதும் பல்துறைசார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய தூயநீருக்கான விசேட செயலணியொன்று உருவாக்கப்;பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இச்செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண சுகாதார அமைச்சரும் விவசாய அமைச்சரும், துணைத் தலைவராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் உள்ளனர். செயலணியின் அமர்வுகளில் கலந்துகொள்ளும்; தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆய்வு முறைமையையும் முடிவுகளையும் பகிரங்கப்படுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாகவே,தூயநீருக்கான விசேட செயலணியின் அமர்வில் நிபுணர்கள் கலந்துகொண்டு ஆய்வு முறைமைபற்றி விளக்கம் அளித்ததோடு முதற்கட்ட ஆய்வு அறிக்கையையும் வெளிப்படுத்தினார்கள். அமர்வின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நிகழ்த்தி இருந்தார்கள்.

முதற்கட்ட ஆய்வு முடிவுகள் வெளியான உடனேயே, காத்திருந்ததுபோலச் சிலர் வடக்கு மாகாணசபை பற்றியும், நிபுணர்குழு பற்றியும் அவதூறுகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். குடிநீர்ப்; பிரச்சினை மக்களை இலகுவில் உணர்ச்சி வசப்பட வைக்கக்கூடியது என்பதால், மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி அவர்களை வடமாகாண சபைக்கு எதிராகத் திசை திருப்பும் நோக்கத்தில் திட்டமிடப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை யாவற்றுக்கும் நாம் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்தாலும் சிலவற்றுக்குப் பதில் சொல்ல விரும்புகிறோம்.

பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் எந்த ஓரு இடத்துக்குமான குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதேச சபைகளும், தேசிய நீர்வழங்கல் வடிகால்சபையும், வடமாகாண விவசாய அமைச்சின் நீர்வழங்கல் பிரிவும், மத்திய அரசின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து தொடர்ச்சியாக நீர்வழங்கலை மேற்கொண்டு வருகின்றன. விழிப்புணர்வு என்ற பெயரில் சிலர் கிணற்றுநீரில் மிதக்கும் கல்சிய வெண் பொடிப்படிவுகள் மற்றும் தூசிப் படலத்தையும்கூட எண்ணெய்மாசு என அப்பாவிப் பொதுமக்களைச் சந்தேகம்கொள்ளவைத்துள்ளனர். அவர்கள் கிணற்று நீரை அருந்தவிடாது தடுத்தும் வருகின்றனர். இவர்களுக்கான நீர் விநியோகமும் பெரும் பணச்செலவின் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டே வருகிறது. ஆய்வின் இறுதி முடிவு வெளி வந்தபின்னரே நீர்விநியோகம் தொடர்பான முடிவு எடுக்கமுடியும் என்பதால், அதுவரை தற்போது உள்ளவாறு நீர்விநியோகம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்பதை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறோம்.

நிபுணர்குழுவின் ஆய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் ஆய்வுமுடிவுகளில் திருப்தி இல்லை என்றும் வடக்குமாகாண சபையினராகிய நாங்கள் ஆய்வின் முடிவுகளை இருட்டடிப்புச் செய்கின்றோமெனவும் பரப்புரை செய்யப்படுகிறது. கிணறுகள் தேர்வு செய்யப்பட்டு அடையாளமிடப்படும்போதும், நீர்மாதிரிகள் சேகரிக்கப்படும்போதும் தனி ஒரு தரப்பினர் பங்கேற்பதில்லை. நிபுணர்குழுவைச் சேர்ந்தவர்கள், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்தவர்கள், பிரதேச வைத்தியஅதிகாரி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தொண்டைமானாறு நீரியல் ஆய்வுமையப் பணியாளர்கள் என்று பல தரப்பினரும் இணைந்த குழுவாகவே பங்கேற்று வருகின்றனர். எம்மை அணுகி ஆய்வுமுறை தொடர்பாக விளக்கம் கோரியவர்களுக்கு தொண்டைமானாறு நீரியல் ஆய்வுமையத்தில் செயன்முறை விளக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னுமொரு விடயத்தை இங்கு பதிவு செய்யவிரும்புகிறோம். தூயகுடிநீருக்கான செயலணியின் கடந்த மார்ச் 20ஆம் திகதி அமர்வில், தேசிய நீர்வழங்கல் வடிகால்சபையினர் தாம் இறுதியாக மேற்கொண்ட நீர்ப்பகுப்பு ஆய்வுகளின் அறிக்கைகளை எம்மிடம் சமர்ப்பித்துள்ளனர். இதில் தெல்லிப்பளையில் எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்களால் சந்தேகிக்கப்பட்ட 20 கிணறுகளின் நீர்மாதிரிகளைப் பரிசோதித்ததில், எந்த ஒரு மாதிரியிலும் எண்ணெய் இருப்பது கண்டறியப்படவில்லை. கோப்பாயில் எண்ணெய் இருப்பதாகச் சந்தேகித்த 20 கிணறுகளில் 15 கிணறுகளில் எண்ணெய்மாசு இருக்கவில்லை. இந்த அமர்வில் கலந்துகொண்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் ஏற்கனவே எண்ணெய் இருப்பதாகத் தங்களால் அடையாளம் காணப்பட்ட கிணறுகளில் மீளவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்போது எண்ணெய்மாசின் அளவு வெகுவாகக் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். எண்ணெய்மாசு ஏன் இல்லாமற் போனது அல்லது குறைந்து செல்கின்றது என்பதற்கான விஞ்ஞான விளக்கத்தை நிபுணர்குழு தனது அடுத்த ஆய்வு அறிக்கையில் தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இயற்கையைவிடத் தலைசிறந்த மருத்துவ நிபுணர் உலகில் வேறு எவரும் இல்லை என்பதை நாம் இந்தஇடத்தில் நினைவிற் கொள்ளவேண்டியுள்ளது.

நிலத்தடிநீரில் கழிவு எண்ணெய்மாசில் இருக்கக்கூடிய ஆபத்தான நச்சு மாசுகள் இல்லாமல் இருப்பதும், எண்ணெய் மற்றும் கிறீஸின் அளவு, குறைந்து செல்வதும் எமது மக்கள் மத்தியில் மனநிம்மதியைத் தோற்றுவித்திருக்கிறது. ஆனால், தண்ணீரில் கழிவு எண்ணெய்மாசைவிட மோசமான கழிவு அரசியல்மாசைக் கலந்து மக்கள் மத்தியில் நீர் தொடர்பான பதட்டத்தை ஏற்படுத்தச் சிலர் முயன்று வருகிறார்கள். வடக்கு மாகாணசபையால் எதுவும் செய்ய இயலாது எனப் பொதுமக்களைத் திசைதிருப்பி வாக்கு வேட்டையாட நினைக்கும் அரசியல்வாதிகளும், போத்தல்குடிநீர் வாணிபசக்திகளும், இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவாருங்கள் என எப்பாடுபட்டாவது குடாநாட்டு வாசிகளால் வடக்கு மாகாணசபைக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும் எனக் காத்துநிற்பவர்களும் இதன் பின்னணியில் கைகோர்த்து உள்ளார்கள் என்பதை எமது மக்களைப் புரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இரண்டாம் கட்ட ஆய்வுக்காக கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகம் நீர் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றுள்ளது. வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் நீர் மாதிரிகளைச் சேகரித்துச் சோதிக்கும் பணியை தொண்டைமானாறு நீரியல் ஆய்வு மையம் ஆரம்பித்துள்ளது. சர்வதேச நிபுணர்கள் சிலரும் சுயாதீனமான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களால், கூடுதல் எண்ணெய் மாசு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட கிணறுகளில் இருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்காகச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுன்னாகம் அனல் மின்நிலையத்தின் உள்ளும், புறமுமுமாக மேலதிக ஆய்வுகள் செய்யப்படவுள்ளன.

விஞ்ஞானம் என்பது உணர்ச்சிகளின் அடிப்படையால் எடுக்கப்படும் முடிவுகளின் தொகுப்பு அல்ல. மாறாக, பரிசோதனை ரீதியாகப் பல தடவைகள் வாய்ப்புப் பார்க்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. சிலர் தாங்கள் விரும்பியபடி ஆய்வின் முடிவுகள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு அமையாவிடின் முடிவுகளை வெளியிடவேண்டாம் என்றும் சிலர் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். உண்மைகளை எவராலும் மறைத்துவிட முடியாது. காலம் தாழ்த்தியேனும் அவை வெளிவந்தே தீரும்.

எண்ணெய் மாசு தொடர்பாக மட்டுமே நாம் இப்போது பேசிவருகிறோம். ஆனால், யாழ் குடாநாட்டின் நீர்வளம் பல்வேறு காரணிகளினால் அளவிலும் தரத்திலும் தாழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இந் நீர்வளத்தை மீட்புச் செய்து தூய நீராகப் பேண வேண்டிய பாரிய கடமை எங்கள் எல்லோருக்கும் உண்டு. இந்தப் பெரும்பணியில் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவல்ல ஆய்வாளர்கள் இங்கே தாய்மண்ணிலும் புகலிட நாடுகளிலும் ஏராளமானவர்கள் உள்ளனர். குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் இவர்கள் அனைவரையும் வடக்குமாகாண சபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.