செய்திகள்

குடாநாட்டில் இன்புளுவென்ஸா வைரஸின் தாக்கம் தீவிரம்

யாழ்.குடாநாட்டில் இன்புளுவென்ஸா எச் வன் வைரஸ் தொற்றுநோயால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குறித்த வைரஸ் தாக்கத்திற்குள்ளான பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதோடு சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுமுள்ளனர்.

மேற்படி வைரஸ் தாக்கத்திற்குள்ளான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையைப் பிரசவித்த பின்னர் பரிதாபகரமாக உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,யாழ்.மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த வைரஸின் தாக்கம் காணப்பட்ட போதும் கடந்த சில வாரங்களாகவே இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.