செய்திகள்

குடாநாட்டில் கடும் மழை:மூன்று தினங்களுக்கு காற்றுடன் கனமழை நீடிக்கும்

யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை நீடித்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17.5.2015) அதிகாலையிலிருந்து மதியம் வரை கனமழை நீடித்தது.மழையுடன் இடி மின்னலும்,இடையிடையே பலத்த காற்றும் வீசியது.இதனால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் குடாநாட்டில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்குத் தொடர்ந்து நீடிக்குமென யாழ்.பிராந்திய வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைக்கு மேலாகக் காணப்பட்ட இடை அயன ஒடுங்கல் வலயம் தற்போது நகர்ந்து வடக்கிற்கு மேலாகக் காணப்படுகின்றது.இதனாலேயே குடாநாட்டில் அதிகளவு மழை வீழ்ச்சியுடனான காலநிலை நிலவுகின்றது.

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையில் 172.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி குடாநாட்டில் பதிவாகியிருந்தது.இந்த மே மாதம் மொத்தமாக 293.05 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருக்கின்றது.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 80.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியிருந்தது.இதன்படி கடந்தாண்டை விடவும் இந்தாண்டு மேமாதம் மழை வீழ்ச்சி இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.

சில வேளைகளில் பலமான காற்றும் வீசும் என்பதால் கடல் கொந்தளிப்பும் காணப்படும்.எனவே மீனவர்கள் அவதானத்துடன் இருப்பதுடன் இடி மின்னல் குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இன்றைய தினம் காலை முதல் யாழ்.குடாநாட்டில் மப்பும் மந்தாரமமுமான காலநிலை நீடிக்கின்றது.அத்துடன் தற்போது பலத்த காற்று வீசுவதையும் அவதானிக்க முடிகிறது. யாழ்.நகர் நிருபர்-

rain (1) rain (2) rain (3) rain (5) rain (6)