செய்திகள்

குடாநாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாகக் குற்றச் செயல்கள் தலைதூக்கியுள்ள நிலையில் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் அடுத்த மாதம் 5 ஆம் திகதிய யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ்.மாவட்டத்தில் தற்போது வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது.அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் முடிவுகளின் படி வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்புவோர் யாழ்.மாவட்டச் செயலகத்தினூடாகச் செய்யலாம்.அவ்வாறு செய்யப்படும் உதவிகள் மத்திய அரசினூடாக நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-