செய்திகள்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவர வலியுறுத்தி தென்னாபிரிக்காவில் பாரிய பேரணி

தென்னாபிரிக்காவில் கடந்த சில வாரங்களாக குடியேற்றவாசிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறை தாக்குதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு கோரி ஜொகானஸ்பேர்க்கில் பாரிய பேரணியொன்று நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 50000ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தென்னாபிரிக்க மக்களும், வெளிநாட்டவர்களும் இணைந்து இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் அதிகளவு நைஜீரிய பிரஜைகள் வாழும் பகுதியூடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றதாகவும்,நிறவெறி ஆட்சிக்காலத்தில் அதற்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதிநிகழ்வுகளில் பாடப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தோம் என்ற பாடலை இவர்கள் இன்று பாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

south afr
தென்னாபிரிக்காவில் இன்று நடைபெறுபவைகளை பார்த்து மண்டேலா தனது கல்லறைக்குள் அழுதிருப்பார் என ஜொகானஸ்பேர்க் பிரஜையொருவர் தெரிவித்துள்ளார்.
நிறவெறி ஆட்சியாளர்களின் காலத்தின் போது ஏனைய ஆபிரிக்க நாடுகளே கறுப்பினத்தலைவர்களிற்கு அடைக்கலம்கொடுத்தன,முழு ஆபிரிக்க கண்டத்தின் உதவியுடனேயே விடுதலை சாத்தியமாகியது என்பதை பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியவாகள் நினைவுபடுத்தியுள்ளனர்.
அவர்கள் எங்களை முழுமனதுடன் வரவேற்றனர். நீங்கள் தற்போது அவர்களை நடத்துவதை போல அவர்கள் எங்களை நடத்தவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.