செய்திகள்

குடும்பத்துடன் சரணடைந்த பெண்களை இராணுவம் தனியாகக் கொண்டு சென்றது: புலித்தேவனின் மனைவி ஜெனீவாவில்

பெற்றோருடன் வந்து சரணடையுமாறு பெண்பிள்ளைகளை அழைத்த இராணுவம் பின்னர் அவர்களை தனியாக அழைத்துக்கொண்டு சென்றார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் சமாதான செயலகப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய புலித்தேவனின் மனைவி ஜெனீவாவில் நேற்று தெரிவித்தர்.

விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் வெள்ளைக் கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் அறை 22 (XXI ) இல் நேற்று  5.30 மணியளவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே புலித்தேவனின் மனைவி இத்தகவல்களை வெளியிட்டார்.

இலங்கையின் இறுதி க்கட்டப்போரின் போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது. இந்த நிலையில் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ள பலர் நேற்று ஜெனீவாவில் சாட்சியமளித்தார்கள்.

ஏற்கனவே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை இராணுவத்தினரும் அரசாங்கமும் சந்தித்திருந்தன. இந்த நிலையில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் புலித்தேவனின் மனைவி, அரசியல்துதுறைப் பொறுப்பாளர் நடேசனின் மகன் உட்பட பலர் நேற்றைய அமர்வில் தகவல்களை வெளியிட்டிருப்பது இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுத்திருக்கின்றது.

அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், மற்றும் எனது கணவன் புலித்தேவன் ஆகியோருடன் காயமடைந்த பல போராளிகளும் வெள்ளைக்கொடியுடன் சரண்டைகின்றோம் என சர்வதேசத்திற்கு தெரிவித்ததன் பின்னர் இராணுவத்திடம் சரண்டைந்த பின்னர் சுடப்பட்டுள்ளனர், ஆனால் ஏன் எப்படி சுடப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர். என்னை கடுமையாகத் தாக்கினார்கள் என மலரவனின் மனைவி தெரிவித்தார்.

“சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம்” என தனது தந்தை பா.நடேசன் தன்னுடன் இறுதியாகத் தொடர்புகொண்ட போது கூறியதாக நடேசனின் மகன் கண்ணீருடன் சாட்சியமளித்திருக்கின்றார்.

இந்த நேரடிச்சாட்சியங்களின் பலனாக செப்டெம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும் அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

02

 

03

 

01