செய்திகள்

குடும்ப முரண்பாடு காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலிலிருந்த கணவனும் போத்தலொன்றை உடைத்துத் தனது கழுத்தில் குத்தித் தற்கொலை செய்ய முயன்று படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த சுமதி(வயது-24) என்ற பெண்ணுக்கும்,வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த சுபாகரன்(வயது-23) என்ற இளைஞருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்தேறியது.திருமணம் முடித்த நாளிலிருந்து இருவரும் இளவாலைப் பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியின் தாயாரால் தன் மருமகனுக்கெதிராக இளவாலைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே குறிப்பிட்ட இளைஞரின் மனைவி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் கணவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்துக் கவலையடைந்த அவர் அங்கிருந்த போத்தலொன்றை உடைத்து தன் கழுத்தில் குத்தித் தற்கொலை செய்ய முயன்றார்.இதனால் படுகாயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்.நகர் நிருபர்-