செய்திகள்

குமார் குணரட்ணம் நாடு கடத்தப்படுவார்: உயர் நீதிமன்றம் அனுமதி

முற்போக்கு சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத்தலைவர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, அந்தக் கட்சி தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் குழு, இந்த அனுமதியை வழங்கியதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நுவன் போபகே தெரிவித்தார்.

இன்று, அந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு தமது தரப்பு வாதத்தை முன்வைத்த அரச தரப்பு வழக்கறிஞர், குமார் குணரத்தினம் நோயெல் முதலிகே என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள காரணத்தினால் அவரது இலங்கைக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தனிப்பட்ட பயணத்துக்காக எனக் காரணம் கூறி, விசா பெற்று, கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்த அவர் விசா விதிமுறைகளை மீறி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு பின்பு, அவர் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருக்கின்ற காரணத்தினால் அவரை நாடு கடத்துவதற்கு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் இருப்பதாகவும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அரச தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதற்கு தீர்மானித்தனர்.