செய்திகள்

குருதிக் கொடை பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்: கஜதீபன்

பொதுவாக இரத்தம் சிந்துவதை அல்லது எங்களின் உடலிலிருந்து ஏதாவதொன்றைக் கொடுப்பதை அல்லது இழப்பதை விரும்புபவர்களாக நாம் காணப்படவில்லை.இவ்வாறு உயிர்த் தியாகம் அல்லது குருதிக் கொடை செய்பவர்களுக்கு மதிப்பளிக்காதவர்களாகவே இன்று நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மனவேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.இவ்வாறானதொரு சமூகத்திலே வைத்தியர்களுக்கு,சமூகம் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய கடமையிருக்கிறது.விஞ்ஞான ரீதியாக குருதிக் கொடை செய்பவர்களுக்கு எந்தவொரு ஆபத்துமில்லையென்பதை பாடசாலை மாணவர்கள் மத்தியிலொரு விழிப்புணர்வு நிகழ்வாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன்.அவ்வாறான போது தான் எமது அடுத்த தலைமுறையினர் மத்தியில் இரத்தம் கொடுப்பதால் தமது உடலுக்கு எந்தத் தீங்குமில்லை என்பதை உணர்த்த முடியும்.

இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்.

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குருதிக்கொடையாளர் கௌரவிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு மனிதர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிருந்தாலும் கூட அந்த மரணத்தையே சிலநாட்களோ அல்லது சில மணித்தியாலங்களோ அல்லது சில வருடங்களோ நிறுத்தி வைக்கக் கூடிய அல்லது சற்றுத் தள்ளி வைக்கக் கூடிய ஆற்றல் குருதிக்கொடையாளர்களிடம் காணப்படுகின்றது.நிழலிலே நாங்கள் பல கதாநாயகர்களைக் காண்கின்றோம்.ஆனால், நிஜத்திலே உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கதாநாயகர்களாகக் குருதிக் கொடையாளர்கள் காணப்படுகின்றார்கள்.

இங்கு இரத்தம் தானம் செய்த குருதிக்கொடையாளர்கள் கௌரவிக்கப்படும் போது கௌரவிக்கப்பட்ட ஒவ்வொருவரின் முகத்திலும் எத்தனை பூரிப்பு.ஏனையவர்களுக்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம்.எங்களால் குருதி பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற மனநிறைவை அவர்களிடம் கண்டேன்.

பலரின் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களைச் சமூகத்தின் கதாநாயகர்களாக்கிய பெருமையும்,சமூக அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திமிக்கவையாகவும் எமது ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.எனவே,எமது ஊடகங்கள் உயிர்காக்கும் உன்னதபணி மேற்கொண்டு வரும் குருதிக் கொடையாளர்களின் தியாகத்திற்கு முக்கியத்துவமளித்துச் செய்திகளை வெளியிட வேண்டும்;.குருதிக் கொடையாளர்கள் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் குருதிக் கொடை வழங்கினாலும் கூட எங்களுக்கென சமூகக் கடமையிருக்கிறது என்பதை ஊடகநிறுவனங்கள் கவனத்திலெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-