செய்திகள்

குறிஞ்சாக்கேணி- கிண்ணியா இடையே இன்று முதல் பேருந்து சேவை – பொதுமக்கள் பேருந்தை மறித்து எதிர்ப்புப் போராட்டம்

குறிஞ்சாக்கேணி- கிண்ணியா இடையே இன்று முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று கடல் வழிப்பாதைப் பயணத்தில் ஆறு உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று காலை 7.00 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை மறித்து எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.பேருந்து செல்ல முடியாமல் பேருந்துக்கு முன்னால் கற்களை போட்டுத் தடைப்படுத்தியிருந்தனர். காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்.

பின்ர் அங்கிருந்து அவர்கள் வீடு சென்றனர், சிலர் வேறு மார்க்கத்தினூடாக பாடசாலை சென்றனர். இதனையடுத்து, அவ்விடத்துக்கு கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் சென்றிருந்தனர். போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து எதிர்ப்புக் கைவிடப்பட்டது.இப்பேருந்து சேவை, காக்காமுனை, குறிஞ்சாக்கேணி,கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்காக விடப்பட்டது. எனினும் இச்சேவையை ஆறு உயிர்கள் போனதன் பிறகா ஆரம்பிக்க வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே எனக் கோரியே மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறிஞ்சாக்கேணி தடாகத்தில் இயங்கும் படகுச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.கிண்ணியா நகர சபைத் தலைவருடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவரினால் படகுச் சேவை நடாத்தப்படுவதாகவும் இதற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.குளத்தின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாலத்தின் நிர்மாணப்பணிகள் முடியும் வரை மக்கள் தடாகத்தை சுற்றி செல்வதற்காக தற்காலிக வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இருப்பினும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் படகில் பயணிக்கும் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.(15)