செய்திகள்

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்: புளொட்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

அப்பாவி மாணவி வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை எந்த விதத்திலும் தப்பிக்கவிட முடியாது. குற்றவாளிகள் தப்புவதற்கு எவரும் எந்தவிதத்திலும் உதவகூடாது என்பதுடன் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட இடந்தரக்கூடாது.

இத்தகைய மிலேட்சத்தனமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்காக வாதாடுவதற்கு முன்வரும் சட்டத்தரணிகள்கூட இவ்வாறான சமூகவிரோதக் செயல்களுக்கு துணை புரிபவர்களாகவும் அதனை ஊக்குவிப்பவர்களாகவுமே சமூகத்தால் கணிக்கப்படுவர்;.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் எமது சமூகத்தின் நலன்கருதி வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து தங்களது முழுப்புலமையையும் செலுத்தி இலவசமாக வழக்காடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது, இன்று தமி;ழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, பாலியல் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்து பாவனை போன்ற விடயங்களில் ஈடுபடுவர்களுக்கு ஒரு சரியான பாடமாக அமையும் என்பதுடன் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒரு ஆரம்பமாகவும் அமையும்.

இதேவேளை மாணவி வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையுடன் கூடிய படுகொலையை எதிர்த்து எமது மக்கள் எழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து நிற்பது நிச்சயமாக வருங்காலத்தில் இவ்வாறான சமூகவிரோதச் செயல்கள் நடைபெறாதிருப்பதற்கு ஒரு ஏதுவாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.