செய்திகள்

குஷ்புவிற்கு எதிராக திருநங்கைகள் மறியல் போராட்டம்

திருநங்கைகள் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (திங்கட்கிழமை) திருநங்கைகள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பொன்றின் போது, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, சட்டமன்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தகுதியில்லை என பேசியதாக கூறப்பட்டதையடுத்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில், குஷ்புவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து திருநங்கை சுதா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

“சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நாங்கள் கடும் போராட்டத்தின் மத்தியில், பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட எங்களுக்கு தகுதி உண்டா? என்று இழிவுபடுத்தும் விதமாகவும் பேசி உள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படி கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை இல்லை. வருடத்துக்கு ஒருமுறை கட்சி மாறக் கூடிய இயல்பு கொண்ட, வேற்று மாநில பெண்ணான நடிகை குஷ்பு கடினமான போராட்டங்களைச் சந்தித்து முன்னேறிக் கொண்டிருக்கும் எங்களை தரக்குறைவாக விமர்சிப்பது நல்லதல்ல.

திருநங்கைகள் குறித்து தவறாக பேசிவரும் அவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, தனது கருத்துகளை குஷ்பு திரும்பப் பெற வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

N5