கூட்டமைப்பிடம் அமைச்சு பதவியினை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் நாம் ஏற்கவில்லை: அரியநேத்திரன்
65 வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும். அந்த அபிலாஷையை அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைச்சுப் பதவிகளை பெறவில்லை. இப்போதும் நாங்கள் பெறமாட்டோம்.இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் குடமுழுக்கு கும்பாபிசேகத்தினை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள முத்துவிநாயகர் வித்தகம் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது 100 நாள் வேலைத் திட்டத்தில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் அமைச்சு பதவியினை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல்வேறுபட்ட புத்திஜீவகள்,சமூகப்பெரியார்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். நூறுநாள் காலத்தில் வழங்கப்படும் அமைச்சுப்பதவிகளைக்கொண்டு எந்த பணியையும் ஆற்றமுடியாது. அடுத்து நாங்கள் அமைச்சுப்பதவியை எடுக்கவேண்டுமாகவிருந்தல் கடந்த அரசாங்கதிலேயே பல அமைச்சுப்பதவிகளை பெற்றிருப்போம். நாங்கள் அபிவிருத்திக்கு எதிராணவர்கள் அல்ல. அது அல்ல எங்கள் பிரச்சினை.
65வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும்.அந்த அபிலாசையை அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. இப்போதும் நாங்கள் பெறமாட்டோம். இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை.
மக்களாகிய நாம் ஒன்றில் விழிப்பாக இருக்கவேண்டும். எமது இனம் தொடர்ச்சியாக எமது பண்பாடுகள்,பாரம்பரியங்களுடன் வாழவேண்டுமாகவிருந்தால் எமது சந்ததியை பெருக்கி ஒரு விடுதலைபெற்ற சமூகமாக வாழவேண்டுமாகவிருந்தால் எதிர்காலத்தில் ஆகிரமிப்பு இல்லாத பூமியில் நாங்கள் வாழவேண்டுமாகவிருந்தால் நிரந்தரமான அரசியல் எமக்கு இருக்கவேண்டும். அந்த நிரந்தரமான அரசியலை செய்யக்கூடிய சக்தி யார் என்பதை மக்கள் இனம் காணவேண்டும். அந்த இலக்கினைக்கொண்ட ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் ஜனாநாயக ரீதியாக பலப்படுத்தினால் மட்டுமே எமது இனத்தினையும்,எமது பண்பாடுகளையும் எமது நிலத்தினையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.