செய்திகள்

கூட்டமைப்பினை பிளவுபடுத்த ரணில் முயற்சி

வட மாகாணத்திலிருந்து படையினர் வெளியேற்றப்படமாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கூறிய விடயம் உண்மையானது. அதனை அவர் தற்போது மறுக்கலாம். என்னுடைய கருத்து பொய்யானது என்றால் படையினர் வெளியேற்றம் தொடர்பில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்த அவர் தயாரா? என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் முதலமைச்சரை சந்திக்கப்போவதில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் சந்திப்பேன் என பிரதமர் கூறும் கருத்துக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாகவோ அல்லது ஒரு உபாயமாகவோ தான் நான் பார்க்கிறேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

வட மாகாண சபையின் 26வது அமர்வு நேற்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றிருந்த நிலையில், குறித்த அமர்வில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனவரி 10ம் திகதி கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, வட மாகாணத்திலிருந்து படையினரை வெளியேற்றமாட்டேன் என மஹாநாயக்க தேரர்களிடம் கூறப்போவதாக என்னிடம் கூறியிருந்தார்.

இது 100 வீதம் உண்மையான விடயம். ஆனால் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் என்னை, பொய்க்காரன் என்றவாறாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அதில் உண்மையில்லை, படையினர் வெளியேற்றம் தொடர்பில் அவருடைய நிலைப்பாடு தற்போது மாறியிருப்பதாகவே நான் கருதுகின்றேன். மேலும் முதலமைச்சருடன் நான் பேசப்போவதில்லை, நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிக்கொள்கிறேன் என அவர் கூறியிருக்கின்றார்.

அது உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தும் முயற்சியாக அல்லது உபாயமாகவே நான் பார்க்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு பாரிய விருட்சமாகும். அதன் கிளைகள் நாங்கள். எங்களுக்குள் பிரிவினைகள் இல்லை. இந்த விருட்சத்தின் கிளைகளை வெட்டி மரத்தை அழிக்க நினைக்கின்றார்கள்.

எம்மை வளப்படுத்துவது, செழுமைப்படுத்துவது, வடகிழக்கு மாகாண மக்களின் தற்கால, எதிர்கால நலன்சார்ந்த சிந்தனைப்பாற்பட்ட உரமேயாகும்  என முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.