செய்திகள்

கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிக்குப் பெரும்பான்மையா? ஏற்றுக் கொள்ள மாட்டோம்: சுரேஷ் எம்.பி போர்க்கொடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்குப் பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ்(சுரேஷ் அணி) அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கீடுகளில் 51 வீதமும் ஏனைய கட்சிகள் மிகுதி 49 வீதத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலேயே தமிழரசுக் கட்சி கைச்சாத்திடுமென அக் கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் அணி) தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக அங்கத்துவக் கட்சிகளின் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பு நடத்தப்பட்டு அதில் எடுககப்படும் முடிவே இறுதியானது.

மாவட்டக் கட்சிக் கிளைகள் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து நாங்கள் கவலையடையவில்லை என அவர் கூறினார்.

கூட்டமைப்பின் அங்கத்தவக் கட்சிகளானன புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழரசுக் கட்சிக்கு இரு தெரிவுகளை வழங்கியிருக்கிறோம். அதில் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம்.

எனவே தனியொரு கட்சிக்குப் பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக் கொள்ளோம். ஒரு கட்சி பெரும்பான்மை அந்தஸ்தைக் எடுத்துக் கொள்வதை நாங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறினார்.

மேலும் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி தனது முழமையான மறுப்பினைத் தெரிவித்திருக்கின்றது.

இதற்கு மேலதிகமாகத் தமிpழ்த் தேசியக் கூட்டமைப்புப் பல கட்சிகளின் கூட்டமைப்பு என்னும் வகையில் ஒரு பொதுவான சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தனது மறுப்பினைத் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் இறுதியான முடிவை நாங்கள் 17 ஆம்,18 ஆம் திகதிகளில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னதாகவே அறிவிக்க முடியும்.

அதற்கு முன்னதாக எந்தவொரு தீர்மானமும் இறுதியான தீர்வாக அமைய முடியாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.