செய்திகள்

கூட்டமைப்புக்கான மாதிரி யாப்பு தயாரித்து வழங்கிவிட்டதாகவும் பதிலுக்கு காத்திருப்பதாகவும் கூறுகிறார் சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான மாதிரி யாப்பு தயாரித்து தழிழரசுக் கட்சியிடம் வழங்கியுள்ளதாகவும் பதிலுக்காக எதிர்பார்த்திருப்பதகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கானதே இந்த மாதிரி யாப்பு என்றும் ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் என்ற தொனிப்பொருளில் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும். அது தான் எமது எதிர்பார்ப்பு ” என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடும். ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பின் தலைவருமே பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் கடந்த 12 வருடங்களாக அக் கட்சியில் இருப்பதால் இது தொடர்பில் பதில் அளிக்க வேண்டிய தேவையுள்ளது. எமது எமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழர் விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஆகிய மூன்று அங்கத்துவ கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான யாப்பு ஒன்றின் மாதிரியை வடிவமைத்து தமிழரசுக் கட்சியிடம் வழங்கியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே இதனை வழங்கிவிட்டோம். இனி தமிழரசுக் கட்சியே முடிவெடுக்க வேண்டும். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம்” என்று கூறினார்.