செய்திகள்

கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமைக்கு வர நாம் ஆதரவு வழங்குவோம்: வவுனியாவில் அமைச்சர் இராதாகிருஸ்ணன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவராகும் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் எமது ஆதரவு நிச்சயமாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் பங்குதாரர்களாக உள்ளது. ஆனால் சிறுபான்மை கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தேசிய அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளாத நிலையில் அவர்களுக்கு ஏன் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்கவேண்டும் என்று பேரினவாதிகள் கேட்கிறார்கள்.

இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நாங்கள் ஒரு காலமும் வர முடியாது. ஜனாதிபதியாக வரமுடியாது. ஏன் எதிர்க்கட்சி தலைவராக கூட வரகூடாதாம். அந்த அளவுக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்களா? அல்லது இயலாதவர்களா? என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவராக வரும் சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக உங்களோடு நாங்கள் இருப்போம். அதற்கு எந்தவிதமான பின்வாங்கலையும் நாம் செய்யமாட்டோம்.

சிறுபான்மை மக்களுக்கு இன்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன . அவற்றுக்கொல்லாம் தீர்வைக் காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். இது வரவேற்கப்படவேண்டிய விடயம். என்று தெரிவித்தார்.