செய்திகள்

கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை: இன்று இறுதி முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வடிவை, அக்கட்சிகளின் தலைவர்கள் நால்வரும் இன்று புதன்கிழமை கூடி இறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்புக் கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையிலான கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொள்ளாமையால் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று இரவு இடம்பெற்ற கூட்டததில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது கூட்டமைப்பு எதிர்காலத்தில் செயற்படும் விதம் குறித்த யாப்பு முன்வரைபு பற்றி விவாதிக்கப்பட்டது.

எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா வெளிநாடுசென்று இன்று நாடுதிரும்பும் நிலையில் அவர் வரத் தாமதமானதால், இன்று தன்கிழமை காலை நான்கு கட்சிகளினதும் தலைவர்கள் கூடி புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வடிவை இறுதிசெய்வர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதனால் இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எவையும் எட்டப்டவில்லை. கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கூட்டமைப்பு தொடர்ந்து இயங்கும் என்றும், அதற்கான புதிய புரிந்துணர்வுச் செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்படுவது என்றும் முடிவெடுத்திருந்தனர்.