செய்திகள்

கூட்டமைப்பு பணம் வாங்கியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் பொய்: யாழ்ப்பாணத்தில் சேனாதிராசா

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பாரிய நிதி அவர்களுக்கு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மறுத்துள்ளதுடன் இது பற்றிய உண்மைத் தன்மையினை விரைவில் வெளிப்படுத்த இருப்பதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நடைபெற்று முடிந்த பின்னர் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரமேச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் வடக்கில் சில அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஊடாக 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் கூட்டமைப்பின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்று புனரமைப்பு செயற்றிட்டங்களுக்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருந்தார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாவை சேனாதிராசா இதுதொடர்பில் மேலும் கூறியதாவது:

நாம் பூநகரியில் கிணறுகள் புனரமைத்தல், சிறிய குளங்கள் மற்றும் வடிகால்கள் புனரமைத்தல் ஆகியவற்றுக்காக 5 மில்லியன் ரூபா நிதியையும், வலி, கிழக்கு பகுதியில் 8 வீதிகளை புனரமைப்பதற்காக சுமார் 40 மில்லியன் ரூபா நிதியையும் நாம் கேட்டிருந்தோம்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெற்குக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு பாரிய நிதி வழங்கப்பட்டுள்ளதாக சில பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் செய்திகள், விமர்சனங்கள் வந்துள்ளன. இது மோசமான, உண்மைக்கு மாறான ஒரு செய்தி. இதனை நாம் நிரூபிக்க வேண்டி இருக்கின்றது. இது தொடர்பாக வட மாகாண சபை முதலமைச்சருக்கு நான் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறேன். இந்த செய்தி குறித்த உண்மைத் தன்மை பற்றி அறிய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அவரது பதிலுக்குப் பிறகு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி ஊடகங்களில் வெளிவந்த உண்மைக்கு மாறான செய்திகள் குறித்து விளக்கம் அளிப்போம். இது தொடர்பில் ஒரு அறிக்கையினை தயாரிப்பதற்கும் நாம் முடிவு செய்துள்ளோம்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கூட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்ய வேண்டிய தேவையினை உணர்ந்துள்ளோம். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவர் மத்தியிலும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தவும் தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கவும் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஒரே நோக்கத்துக்காக செயற்படுவது என்றும் இந்த கூட்டத்தில் அராயவிருக்கிறோம். இத்தகைய ஒரு கூட்டம் இன்று மிகவும் அவசியமாக இருக்கிறது. இதே போன்ற ஒரு கூட்டம் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற இருக்கிறது.” என்று அவர் கூறினார்.