செய்திகள்

கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று திருகோணமலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு விடயத்தில் விஷேடமாக தான் சார்ந்த கட்சியான இலங்தைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது என அவர் கூறினார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு பாரிய பங்களிப்புகளை செய்தவர்கள் என்று கூறிய அவர் தமிழரசுக் கட்சியினரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் இன்றி இதனை முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்

இலங்கை தமிழ் அரசுக்சு கட்சி , டெலோ , புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையிலே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டபப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய மாட்டோம் என நாம் ஒரு போதும் கூறவில்லை. அதனை பதிவு செய்வதென்றால் அதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். எமது மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

தற்போது சகலரும் ஒருமித்து செயல்படும் வேளையில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உயர்ந்த அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், அந்த அங்கீகாரத்தை சகலரும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என கூறிவிட முடியாது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சம கால அரசியல் நிலவரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.