செய்திகள்

கூட்டமைப்பை பதிவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு தேர்தலை பயன்படுத்துவோம்: ஆனந்தன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மிளிரச்செய்வதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு தேர்தல்களைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த காலங்களில் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத்தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலிலும் சர்வாதிகார ஆட்சியை மாற்றி முழுநாட்டிற்குமே உண்மையான ஜனநாயக காற்றைச்சுவாசிப்பதற்கான வழியை எமது மக்களே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் என்றுமே அரசியல் தெளிவுள்ளவர்கள். இந்நிலையில் மாறியுள்ள அரசியல் சூழலில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் திகதியன்று கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், எமது வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், எமது மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தவிர வேறு எவருக்கும் ஆதரவு கிடைக்காது என்பதை நிரூபிப்பதற்கான தருணமாக இந்தத்தேர்தலை எமது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்டத்தின் உங்களது பிரதிநிதியாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையகத்தில் எமது சாட்சிகள் அடங்கிய விசாரணை அறிக்கை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாதது எமக்கு சற்று ஏமாற்றமாக அமைந்தாலும், இத்துடன் எல்லாமே முடிந்துவிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே மனம் தளர்ந்துவிடாமல் எமக்கு இருக்கும் ஒரே சக்தியான வாக்குப் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் கூட்டுவதற்கு எமது மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கும் அதனை ஒரு வலிமை மிக்க சக்தியாக எழுச்சிபெறச் செய்வதற்கும் உட்கட்சி ஜனநாயகத்தை வலியுறுத்துவதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்று உங்களிடம் கோருகின்றேன்.

எனது இந்த வேண்டுகோள் நிறைவேறுமாக இருந்தால் இந்த ஆணையைக்கொண்டே மக்களின் அபிலாசைகளுக்கு தமிழ் தலைமையும் செவிசாய்க்க வேண்டும் என்ற உங்களின் கட்டளையை அழுத்தமாக எடுத்துரைப்பதற்கு வழிவகுக்கும். ஆகவே தற்காலிக சரிவுகளைக்கண்டு மனம் தளராமல் எமது ஒளிமயமான எதிர்கால விடியலுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துவோம் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.