செய்திகள்

கூட்டமைப்பை பதிவு செய்வதை யார் விரும்பவில்லை? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு யார் விரும்பவில்லை என்பதை தமிழரசுக் கட்சியின் தலைமையே கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சியில் உள்ள அரைவாசிப்பேர் இணங்கியுள்ள நிலையில் இன்னமும் யார் அதனை எதிர்க்கிறார்கள் என்பதை இரா.சம்பந்தனே கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் விவகாரம் தொடர்பில் கேட்டபோதே பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற விடயம் புதியதொன்று அல்ல. 2002ம் ஆண்டு முதல் சுமார் 13 வருடங்களாக முன்வைக்கப் பட்டுள்ள விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என தனியான யாப்பு, தனியான கட்டமைப்பொன்று அவசியம். இதனை இதில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களில் அரைவாசிப்பேரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அனைவரின் இணக்கப்பாட்டுடனேயே தமிழரசுக் கட்சியைப் பதிவுசெய்ய முடியும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்படுவதை தமிழரசுக் கட்சியில் யார் எதிர்க்கிறார்கள் என்பதை சம்பந்தன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

என்னைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய் யப்படுவதை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவமே விரும்ப வில்லையெனத் தோன்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.